

கேரள மாநிலம் முழுவதும் பருவ மழை காரணமாக வரலாறு காணாத அளவிற்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி " இந்த மாதத்தில் மட்டும் இதுவரை மாநிலம் முழுவதும் சுமார் 2,06,801 பேர் பல்வேறு வகையான காய்ச்சல் பாதிப்புகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஒரே நாளில் மட்டும் 13,000-க்கும் மேற்பட்ட புதிய காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி நிலைமையின் தீவிரத்தைக் காட்டியுள்ளது.
மாநிலம் முழுக்க கொசுக்களினால் பரவும் டெங்கு காய்ச்சல் 1195 இருப்பது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4,118 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கேரளா சுகாதாரத் துறைக்கு மிகப் பெரும் சவாலாக ஷிகெல்லா பாக்டீரியா தொற்று உருவெடுத்துள்ளது. இது கடுமையான வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் உடலில் மிக வேகமான நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி, ஒரு சில உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 71 பேருக்கு இந்த நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 6 பேர் இந்த நோய் தொற்றினால் பலியாகியுள்ளனர். அதில் இந்த மாதம் மட்டும் 4 பேர் வரை பலியாகியுள்ளனர்.
மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் எலிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் மஞ்சள் காமாலை நோய்களும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்த காய்ச்சல் தேங்கியுள்ள மழை நீரில் எலிகளின் சிறுநீர் கலப்பதன் மூலம் பரவுகிறது. கடந்த ஆறு மாதத்தில் இந்த காய்ச்சலினால் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு நோய்த்தொற்றுகளுடன் போராடியுடன் கேரளாவிற்கு , மேலும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக நிபா வைரஸ் பரவல் உள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சுகாதாரத் துறை உடனடியாகத் தீவிரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை செயல்படுத்தியுள்ளது. நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
தொற்று நோய்கள் மட்டுமே பாதிப்பு என்று வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில், மாநிலத்தில் தொழுநோய் பாதிப்பும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது, பொதுமக்களை அதிர்ச்சடைய செய்துள்ளது. இதுவரை
186 பேருக்குத் தொழுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலைமை கையை மீறிச் செல்வதால் பொது மக்களை, ஒரு சில சுகாதார கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம் அதிகப்படியான நோய் பரவல் காரணமாக கேரள மருத்துவமனைகளில் போதிய அளவு வசதிகள் நோயாளிகளுக்கு கிடைப்பதில்லை. போதுமான அளவில் படுக்கை வசதிகளும் இல்லாததால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடுமையாக நோய் தொற்று பரவி வரும் நிலையில் தமிழக அரசு மாநில எல்லைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. தமிழகத்தில் நோய் பரவல் ஏற்படாத வகையில் தீவிர சுகாதார விதிமுறைகளை எல்லைகளில் பின்பற்றி வருகிறது.