

இன்றைய பள்ளிக் கல்வியில் நாம் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களில் ஒன்று, மாணவர்களுக்கு ஏற்படும் பாடப்புத்தகச் சுமை என்றால் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் உண்மை. ஒன்றாம் வகுப்பு முதல் மேல் நிலை வரையிலும் மாணவர்கள் அதிகமான நோட்டுப் புத்தகங்களையும், பாடநூல்களையும் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. இது அவர்களது உடல் வளர்ச்சிக்கும், மனநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலையாக மாறியுள்ளது.
பெரும்பாலான பள்ளிகளில் இந்த பாடப்புத்தகச் சுமையினால் மாணவர்களும் பெற்றோர்களும் மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். இந்த சூழலில், கேரள மாநிலம் 2025-26 கல்வியாண்டை சற்று வித்தியாசமான முறையில் தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில், மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட வேண்டாம் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கு மாறாக, இந்த காலகட்டத்தில் சமூக விழிப்புணர்வு மற்றும் வாழ்க்கை திறன் மேம்பாடு சார்ந்த கல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாறுபட்ட முயற்சி ஏன் இன்றைய கல்விக்குப் பெரிய முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது? இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் எதிர்கால பலன்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
சமூக விழிப்புணர்வுடன் கல்வி:
புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்தில், மாணவர்கள் பாடநூல்களைப் படிப்பதற்குப் பதிலாக, போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள், வன்முறை நடத்தையை கட்டுப்படுத்துதல், உணர்ச்சி கட்டுப்பாடு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகளில் கவனம் செலுத்துவார்கள். இது தவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், சமூக நல்லிணக்கம் போன்ற பிற முக்கிய தலைப்புகளும் இந்த சிறப்பு வகுப்புகளில் இடம்பெறும். இந்த திட்டத்தின் பகுதியாக சிறப்பு வகுப்புகள், கலந்துரையாடல்கள், களப்பணிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த அணுகுமுறை, மாணவர்கள் பாடப்புத்தக அறிவுக்கு அப்பால், சமூகப் பிரச்னைகளை ஆழமாகப் புரிந்துக் கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளைக் காணும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவும் பெரிதும் உதவும்.
முக்கியத்துவம் என்ன?
இந்த புதிய கல்வி முறை பல காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது:
1.பாடச்சுமை குறைப்பு:
பள்ளியின் முதல் நாளிலிருந்தே மாணவர்கள் பாடச்சுமையால் அழுத்தப்படுவதை இந்த புதுமையான திட்டம் தவிர்க்கிறது.
2. ஆழ்ந்த கற்றல்:
அவசரமாக பாடங்களை நடத்துவதற்குப் பதிலாக ஒவ்வொரு கருத்தையும் நன்கு புரிந்துகொள்ள மாணவர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கிறது.
3. சமூக உணர்வு மேம்பாடு:
இளம் வயதிலேயே சமூகப் பிரச்னைகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்வது, பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க வழிவகுக்கும்.
4. வாழ்க்கை திறன் பயிற்சி:
பாடநூல் கல்வியைத் தாண்டி குழுவாக இணைந்து செயல்படுதல், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது, பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது போன்ற வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்வார்கள்.
5. ஆசிரியர்களுக்கு வாய்ப்பு:
ஆசிரியர்கள் மாணவர்களுடன் நெருக்கமாக உரையாடி, அவர்களின் தனிப்பட்ட திறமைகளை அடையாளம் காணவும், அதற்கு ஏற்றவாறு கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்கவும் இந்த முறை உதவுகிறது.
6. அதிக ஈடுபாடு:
பாடநூல்களை மட்டும் படிக்கும் வழக்கமான முறையை விட, செயல்பாடு சார்ந்த கற்றல் மாணவர்களை அதிக ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் கற்க உதவும்.
7. மன அழுத்தம் குறைவு:
ஆரம்பத்திலேயே பாடச்சுமை இல்லாததால், மாணவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆர்வத்துடனும் பள்ளிக்குச் செல்வார்கள்.
8. தன்னம்பிக்கையின் உயர்வு
புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதும், சமூகத்தில் பங்களிப்பதும் மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
கேரள அரசின் இந்த புதிய அணுகுமுறை மாணவர்களின் கற்றல் அனுபவத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாடநூல்களை சில நாள்களுக்கு பிறகு கற்றாலும், சமூக விழிப்புணர்வுடன் தொடங்கும் இந்த கல்வி ஆண்டு, மாணவர்களுக்கு ஒரு அர்த்தமுள்ள அனுபவத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை.