இந்தியாவிலேயே முதன் முறையாக தண்ணீருக்கு பட்ஜெட் ஒதுக்கிய மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுத் திகழ்கிறது கேரளா. உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் குடிநீர் தட்டுப்பாடு பெருமளவில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சர்வதேச நாடுகள் சார்பில் நீரினை சேமிப்பது, வீணாக்காமல் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கேரளாவில் தண்ணீருக்கு என்று தனி பட்ஜெட் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் முதல் கட்டமாக உள்ளாட்சி அமைப்புகள் அளவில் இந்த பட்ஜெட் செயலாக்கம் பெற இருக்கிறது.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் தண்ணீருக்கு பஞ்சமில்லை. இங்கு 44 நதிகள், ஏராளமான ஓடைகள், ஏரிகள் என்று நீர் நிலைகள் நிறைந்துள்ளன. இருப்பினும், சமீப காலமாக கேரள மாநிலத்தை தண்ணீர் பஞ்சம் வாட்டி வதைக்கிறது. இதனால், நீர் வளங்களை பாதுகாக்கவும், நீர் மேலாண்மையை முறையாக அமல்படுத்தவும், நீர் நுகர்வு குறித்து கணக்கெடுக்கவும் மற்றும் நீர் நிலைகள் பராமரிப்பு, புனரமைப்பு பணிகள், நீர் சேமிப்பு உள்ளிட்டவற்றை பெருக்குவதற்கும் தனியாக தண்ணீர் பட்ஜெட் அமலுக்கு வருகிறது.
இந்த பட்ஜெட்டின் மூலம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னைக்கு முடிவு கட்டுவதுடன், தொலைநோக்கு பார்வையில் நீர் வளத்துக்கான திட்டங்களைக் கொண்டு வரவும் கேரளா அரசு முடிவு செய்துள்ளது" என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து இருக்கிறார்.