கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை கான வரும் பக்தர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அய்யன் செயலி (Ayyan App) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுவும் குறிப்பாக கார்த்திகை மாதம் தொடங்கியதால் அனைவரும் சபரிமலைக்கு படையெடுத்து வருகின்றனர்.
ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால், பக்தர்களின் வசதிக்காக புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சபரிமலைக்கு செல்லும் முக்கிய வழித்தடங்களில் கிடைக்கும் பல்வேறு சேவைகளை ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆப்லைனில் கூட செயல்படும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சன்னிதானம் செல்லும் தூரம், மருத்துவ அவசர சிகிச்சை பிரிவு, இலவச குடிநீர் விநியோக மையங்கள், யானைப்படை பிரிவு ( Elephant Squad) தகவல் போன்ற பல்வேறு தகவல்கள் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ள முடியும். இந்த செயலியில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பின்பற்ற வேண்டிய சடங்குகள், ஆச்சார முறைகள் மற்றும் பொதுவான வழிமுறைகள் உள்ளன.
அவசர கால உதவிகள் பெற தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களும் இந்த செயலியில் உள்ளன. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தொடர்பு கொள்ளவும் முடியும். வனப்பாதைகளில் நுழைவாயில்களில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து அல்லது https://play.google.com/store/apps/details?id=com.sabarimala.sabariwalk என்ற இணைப்பின் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்தும் செயலியை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.