சமீப காலத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான தூதரக உறவுகள் முற்றிலும் முறிந்து போயுள்ளன. இதற்குக் காரணமாக காலிஸ்தானி நிஜ்ஜார் சிங்கை சுட்டுக் கொன்றதில் இந்தியாவின் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டி இருந்தார் கனடிய பிரதமர் ஜஸ்டின் டிருடோ. அதன் பின்னர் இரு நாட்டுக்கும் இடையில் இருந்த உறவுகள் தடைப்பட்டன.
இந்நிலையில், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயிலில் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கோயிலுக்கு வரும் பக்தர்களைத் தாக்கினர். இது வீடியோவாக சமூக ஊடகங்களில் பரவியது.
இதற்குப் பதிலளித்துள்ள கனடாவின் பிராம்ப்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபி சஹோடா, “பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயிலுக்கு வெளியே சமீபத்தில் நடந்த வன்முறைச் செயல்களால் கவலையடைந்தேன். எங்கள் சமூகத்தில் உள்ள அனைவரும் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பாகவும் மரியாதையாகவும் நடத்தப்பட வேண்டும். எங்கள் சமூகத்தில் இதுபோன்ற வன்முறை செயல்களுக்கு இடமில்லை. இந்த வன்முறையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நான் காவல்துறைத் தலைவர் நிஷானுடன் பேசினேன். பீல் பிராந்திய காவல்துறை எங்கள் சமூகத்தைப் பாதுகாப்பதற்கு விரைவாகச் செயல்படும் என்று நான் நம்புகிறேன். எங்கள் சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. மேலும், சம்பந்தப்பட்டவர்கள் விளைவுகளை சட்டத்தின் வழியில் சந்திக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
ஒன்ராறியோ சீக்கியர்கள் மற்றும் குருத்வாரா கவுன்சிலும் இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளது. அந்தக் கண்டனத்தில், "வன்முறை மற்றும் மிரட்டலுக்கு சமூகத்தில் இடமில்லை. மேலும், அவர்கள் அனைவருக்கும் அமைதி, ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை பரிந்துரைக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது X தள பக்கத்தில் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, "இன்று பிராம்ப்டனில் உள்ள இந்து கோயிலில் நடந்த வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஒவ்வொரு கனடியனும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு. சமூகத்தைப் பாதுகாக்கவும், சம்பவத்தை விசாரிக்கவும் விரைவாகப் பதிலளித்த பீல் பிராந்திய காவல்துறைக்கு நன்றி" என்று அந்தப் பதிவு இருந்தது.
முன்னதாக, கனடிய எதிர்க்கட்சித் தலைவர் பியர்ரே பொலிவ்ரே “கோயில் மீதான தாக்குதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கண்டித்துள்ளார்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து, இந்துக்களின் நலனுக்காகச் செயல்படும் கனடாவைச் சேர்ந்த சேவை அமைப்பான ‘இந்து ஃபோரம்’ கனடாவும், காலிஸ்தானி தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கனடிய குடிமக்களைப் பாதுகாக்கவும் பிரதமர் ட்ரூடோவை வலியுறுத்தியது.
கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர ஆர்யா, கோயில் மீதான தாக்குதலைக் கண்டித்து, "கனடிய காலிஸ்தானிகளால் இன்று ஒரு சிவப்புக் கோட்டைத் தாண்டியுள்ளது. பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயில் வளாகத்திற்குள் இந்து-கனடிய பக்தர்கள் மீது கலிஸ்தானிகள் நடத்திய தாக்குதல் வெட்கக்கேடானது என்பதைக் காட்டுகிறது. கனடாவில் காலிஸ்தானி வன்முறை தீவிரவாதமாக மாறிவிட்டது. கனடிய அரசியல் எந்திரத்தில் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்குள் காலிஸ்தானியர்கள் திறம்பட ஊடுருவியுள்ளனர் என்ற செய்திகளில் ஒரு சிறிய அளவு உண்மை இருப்பதாக நான் உணர ஆரம்பிக்கிறேன்" என்று கூறி உள்ளார்.
கனடாவின் கருத்துச் சுதந்திரச் சட்டங்களை காலிஸ்தானி தீவிரவாதிகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும், ‘இலவச அனுமதி’ பெறுவதாகவும் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கவலை தெரிவித்தார்.
கனடாவில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு “கனடா பிரதமர் ட்ரூடோ இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பிரித்துள்ளார்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.