இறுதிக்கட்டத்தில் ஒற்றுமை யாத்திரை: 21 அரசியல் கட்சிகளுக்கு கார்கே அழைப்பு!

இறுதிக்கட்டத்தில் ஒற்றுமை யாத்திரை: 21 அரசியல் கட்சிகளுக்கு கார்கே அழைப்பு!
Published on

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்று திரட்டும் முயற்சியாக ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை, தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து பஞ்சாபில் நுழைந்துள்ளது.

ராகுலின் இந்த யாத்திரைக்கு கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், அரசியல்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

உ.பி.யில் ஒற்றுமை யாத்திரை நுழைந்தபோது அதில் பங்கேற்குமாறு சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோருக்கு ராகுல் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அவர்கள் யாத்திரையில் பங்கேற்காமல் வாழ்த்துகளை மட்டும் தெரிவித்திருந்தனர்.

3750 கி.மீ. தொலைவு கொண்ட இந்த யாத்திரை இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. யாத்திரை வரும் ஜனவரி 30 ஆம் தேதி காஷ்மீரில் முடிவடைகிறது.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஸ்ரீநகரில் வருகிற 30 ஆம் தேதி நிறைவுறும் ஒற்றுமை யாத்திரை நிகழ்வில் பங்கேற்குமாறு 21 அரசியல்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் உள்பட 21 அரசியல்கட்சிகளுக்கு அவர் கடிதம் மூலம் அழைப்புவிடுத்துள்ளார்.

எதிர்க்கட்சி அணிக்கு தலைமை வகிக்க காங்கிரஸுக்கு என்ன தகுதியிருக்கிறது என்று கேள்வி எழுப்பிய திரிணமூல் காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் பஞ்சாப் மாநில தேர்தலில் காங்கிரஸை படுதோல்வி அடையச் செய்த ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அகிலேஷின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் பா.ஜ.க.வுடன் உறவை முறித்துக்கொண்ட நிதிஷின் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், பா.ஜ.க. அல்லாத அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜுஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பவில்லை என்று தெரியவந்துள்ளது.

கார்கே அரசியல்கட்சிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ ராகுல் காந்தி நடத்தி வரும் ஒற்றுமை யாத்திரை இறுதிக்கட்டத்தில் உள்ளது. வருகிற 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் நிறைவுநாள் நிகழ்ச்சி நடைபெறும்.

அன்பு, கருணை, அஹிம்சை ஆகியவற்றை வலியுறுத்தி வாழ்ந்தவரும், நாட்டின் விடுதலைக்காக இன்னுயிரை தந்தவருமான மகாத்மா காந்தியின் நினைவுநாளில் இந்த நிகழ்வு அவருக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் இந்த ஒற்றுமை யாத்திரை மூலம் லட்சக்கணக்கான மக்கள் மத்திய அரசுக்கு எதிரான மனநிலையை கொண்டிருப்பதை அறிந்து கொண்டோம்.

வெறுப்புணர்வு, வன்முறை எதிராக ஒன்றிணைந்து நாம் அகிம்சை, உண்மை, கருணையை வலியுறுத்துவோம். அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வோம் என்று கார்கே குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com