சமீபகாலமாக குழந்தைகளை திருடி விற்பனை செய்யும் குற்றம் அதிகரித்து வருகிறது. குழந்தைகளை மருத்துவமனை, பொழுது போக்கு பூங்கா போன்ற இடங்களில் திருடி, பிறகு அதிக விலைக்கு விற்று விடுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சம்பவம் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் நடந்துள்ளது. போலீஸார் அக்கும்பலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வடலூரில் குழந்தையை கடத்திரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
2 மாத ஆண் குழந்தையை ரூ.3½ லட்சத்துக்கு விற்ற பெண் டாக்டர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் அருள்முருகன். இவரது மனைவி சுடர்விழி (வயது 37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. அருள்முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடர்விழி, பெத்தாங்குப்பத்தில் வசித்து வரும் தனது சகோதரியின் கணவர் விஸ்வநாதனிடம், தன்னிடம் ஒரு ஆண் குழந்தை உள்ளதாகவும், அதற்கு பிறப்பு சான்றிதழ் வாங்கி தாருங்கள் என கேட்டுள்ளார்.
இதையடுத்து விஸ்வநாதன், அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதற்காக பல வகையிலும் முயற்சி செய்தார். இருப்பினும் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவரால் பிறப்பு சான்றிதழ் வாங்க முடியவில்லை
அதன் பிறகு விஸ்வநாதன் சட்டவிரோதமாக குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கோரினால் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்று கூறி, கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் சென்று குழந்தையைக் காட்டி, அனாதை குழந்தை என்று கூறி இதை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்குமாறு கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் விஸ்வநாதன் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். விஸ்வநாதன் கொடுத்த தகவலின்படி சுடர்விழியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி வடலூரை சேர்ந்த சித்த மருத்துவர் மெகருன்னிசாவிடம் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து இந்த குழந்தையை தான் வாங்கியதாக தெரிவித்தார்.
போலீசார் மெகருன்னிசாவிடம் விசாரித்தபோது, அவர் குழந்தையை கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மெகருன்னிசா(67), சுடர்விழி, சீர்காழி சட்டநாதபுரம் ஆனந்தன்(47), கீரப்பாளையம் ஜேஜே நகர் கஜேந்திரன் மனைவி ஷீலா(37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் 2 மாத ஆண் குழந்தையை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே குழந்தையை விற்ற ஆனந்த் என்பவரை போலீசார் பிடித்து, குழந்தையின் பெற்றோர் யார்?, எதற்காக குழந்தையை விற்றனர்? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 3 குழந்தைகளை கடத்தி விற்ற வழக்கில் கைதானவர் பெண் சித்த மருத்துவர் மெகருன்னிசா. இவர் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளை வளர்க்க வசதியில்லாத ஏழை, எளிய பெண்களை குறிவைத்து அவர்களிடம் அதிக பணம் தருவதாகவும், அதற்கு பதிலாக குழந்தையை தர வேண்டும் எனவும் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி வந்துள்ளார்.
அவ்வாறு வாங்கிய குழந்தைகளை, குழந்தை இல்லாத தம்பதிகளிடம் அதிக விலைக்கு விற்றுள்ளார். மேலும் மெகருன்னிசா மீது அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் குழந்தை கடத்தல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.