
"எனக்கு என் வேலையைப் பார்க்கவே நேரம் சரியாக இருக்கிறது... இதுல குழந்தைகளை எப்படி நேரம் ஒதுக்கி கவனமா பாத்துக்கொள்வது?" என்று கவலைப்படும் பெற்றோரா நீங்கள்?
மகனோ அல்லது மகளோ அடம் பிடிக்கும்போது, அவர்கள் கையில் மொபைலைக் கொடுத்தால், சில மணி நேரம் நிம்மதி கிடைக்கும் என்ற ஒரே கண்ணோட்டத்தில் இருக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் உங்கள் குழந்தையின் எதிர்காலப் பார்வைக்கு எப்படித் துரோகம் செய்கிறீர்கள் தெரியுமா?
பணியிட அழுத்தத்திற்காகவோ அல்லது தனிப்பட்ட ஓய்விற்காகவோ குழந்தைகளிடம் (செல்போன்) டிஜிட்டல் திரைகளைத் திணிக்கும் பழக்கம் இன்று சென்னை,பெங்களூரு,மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
கண் மருத்துவர்கள் இன்று ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்: குழந்தைகள் மத்தியில் மயோப்பியா (Myopia - கிட்டப்பார்வை) மற்றும் உலர் கண் நோய் (Dry Eye Syndrome) பாதிப்புகள், கட்டுப்பாடில்லாமல் அதிகரித்து வருகின்றன.
மயோப்பியா இப்போது உலகளாவிய தொற்றுநோய் (Global Epidemic) போலப் பரவி வருவதாக மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஐந்தில் ஒரு குழந்தை கிட்டப்பார்வைக்கு ஆளாகிறது!
தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும், கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக இந்த பாதிப்பு விகிதம் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் தொடங்கிய இந்தத் திரைப் பழக்கம், குழந்தைகளின் கண்களில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியதே அடிப்படைக் காரணமாகும்.
பரிதாபகரமான புள்ளிவிவரம்: தற்போது இந்தியாவில் பெரு நகரங்களில் உள்ள கண் மருத்துவமனைகள் மாதந்தோறும் சுமார் 30 முதல் 90 கிட்டப்பார்வை மற்றும் உலர் கண் நோய் பாதிப்புகளைப் பதிவு செய்கின்றன.
ஊரடங்குக்கு முன்: ஊரடங்குக்கு முன்பு, மாதத்திற்கு இரண்டில் இருந்து மூன்று உலர் கண் அல்லது கிட்டப்பார்வை பாதிப்புகள் மட்டுமே குழந்தைகளிடம் காணப்பட்டன.
ஆனால், ஊரடங்கிற்குப் பிறகு, வாரத்திற்கு ஐந்து முதல் எட்டு வழக்குகள் வரை காணப்பட்டது.
தற்போது, மாதத்திற்கு 10 முதல் 16 வழக்குகள் நிலையாகப் பார்க்கிறோம் என்று பிரபல கண் மருத்துவர்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை குறித்து வருந்துகின்றனர்..
பெரும்பாலான பெற்றோருக்கு, குழந்தைகள் வகுப்பறையில் உள்ள கரும்பலகையைத் தெளிவாகப் பார்க்க முடியாமல் தடுமாறும்போதுதான் முதன்முதலாகப் பாதிப்பின் அறிகுறிகள் தெரிகின்றன.
அறிவியல் அதிர்ச்சி: 'வெயில்' இல்லையேல் பார்வை பாதிக்கும்
“பள்ளிகளில் கூட, குழந்தைகள் வெளிப்புற நடவடிக்கைகளுக்குக் குறைவான நேரத்தையே செலவிடுகிறார்கள்.
இது திரைப் பழக்கத்தை விட மோசமானது" திரை நேரம் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்குச் சூரிய ஒளி மற்றும் வெளிப்புற விளையாட்டுகளில் பங்கு இல்லாததும் இந்தப் பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
டோபமைன் ரகசியம் (Dopamine Secret): குறைந்த டோபமைன் அளவுகள் கிட்டப்பார்வை மோசமடைய வாய்ப்புகளை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பார்வை இழப்பைத் தடுக்கும் புதிய சிகிச்சைகள்
கிட்டப்பார்வைக்கான சிகிச்சை முறைகள் இப்போது பரிணாமம் அடைந்துள்ளன. "முன்பெல்லாம், கிட்டப்பார்வைக்கு வெறும் கண்ணாடி மட்டுமே வழங்கப்பட்டது.
ஆனால், இப்போது கிட்டப்பார்வை மேலும் மோசமடைவதைத் தடுக்க, குறைந்த டோஸ் அட்ரோபைன் சொட்டு மருந்துகள் (Low-dose atropine drops) மற்றும் லென்ஸ்லெட் கண்ணாடிகள் (Lenslet glasses) போன்ற மருத்துவ முன்னேற்றங்கள் வந்துள்ளது.
பிற ஆபத்துகள்: ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக நான்கு அல்லது ஐந்து வயதிலேயே இளவயது கண்புரை (Juvenile Cataract) ஏற்படுவதும், கண் கோளாறுகள் (Squint) கண்டறியப்படுவதும் அதிகரித்து வருகிறது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கண் கோளாறுகள் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்குச் சிகிச்சை மூலம் முழுமையாகச் சரிசெய்ய முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
100% பாதுகாப்பிற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?
உங்கள் குழந்தைகளின் எதிர்காலப் பார்வைக்கு நீங்களே பொறுப்பு. மொபைலை கொடுத்துவிட்டு, கவலையில்லாமலும் நிம்மதியாகவும் இருப்பதை விட்டுவிட்டு, பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்:
திரை நேரத்தைக் குறைக்கவும்: வீட்டுப் பாடம் தவிர, பொழுதுபோக்கிற்கான திரை நேரத்தை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்குக் குறைவாகக் கட்டுப்படுத்தவும்.
வெளியே விளையாட அனுப்பவும்: தினசரி குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் குழந்தைகளை வீட்டுக்கு வெளியே, சூரிய ஒளி படும் இடத்தில் விளையாட ஊக்குவிக்கவும்.
20-20-20 விதி: டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்தும் போது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை, 20 அடி தூரத்தில் உள்ள பொருளை 20 வினாடிகளுக்கு பார்க்கச் சொல்லுங்கள்.
சமச்சீர் ஊட்டச்சத்து: வைட்டமின் D குறைபாட்டைத் தவிர்க்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைக் கொடுக்கவும்.
ஒளியமைப்பு: படிக்கும் போதும், எழுதும் போதும் போதுமான வெளிச்சம் உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
முறையான பரிசோதனை: எந்த அறிகுறியும் இல்லாவிட்டாலும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லவும்.
கண் சொட்டுகள்: மருத்துவர் பரிந்துரைத்தால், அட்ரோபைன் சொட்டுகளைத் தவறாமல் பயன்படுத்தவும்.
தூரத்தைக் கண்காணிக்கவும்: புத்தகங்கள் அல்லது திரைகளை மிக அருகில் வைத்துப் படிக்க அனுமதிக்க வேண்டாம்.
தண்ணீர்: உலர் கண் நோயைத் தவிர்க்கக் குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யவும்.
மாற்றுச் செயல்பாடுகள்: ஓவியம் வரைதல், புதிர் போடுதல் அல்லது பாரம்பரிய விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்துங்கள்.