கில்லேடி கொள்ளையன் பிடிபட்டான்!

கில்லேடி கொள்ளையன் பிடிபட்டான்!

சென்னை சாலிகிராமத்தில் வசிக்கும் தொழிலதிபர் வீட்டில், ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளை அடித்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையன், வேறொரு கொள்ளை சம்பவத்தில் சிக்கியபோது பிடிப்பட்டான். 

பகலில் திருமண மேடை அலங்கார வேலை, இரவு நேரத்தில் வீடு புகுந்து திருடும் பலே கொள்ளையனாகவும் ஜென்டில்மேன் திரைப்பட பாணியில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வந்தது அம்பலமானது.

சென்னை சாலிகிராமம் குமரன் காலனி இரண்டாவது தெருவில் வசித்து வருபவர், பிரபல கலர் லேப் தொழில் செய்து வரும் சந்தோஷ் குமார். 

கடந்த மாதம் 22ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் ஹைதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார். இதை நோட்டமிட்டு அறிந்து கொண்ட கொள்ளையர்கள் 13 லட்சம் ரொக்கம், சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் என அனைத்தையும் அள்ளிச் சென்றுவிட்டனர்.

இந்த கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் மூன்று தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். இதனடையில் முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகரில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி, பாலாஜி ராம்குமார் என்பவரது வீட்டில் 23 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போது, கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த 32 வயதான முத்து என்பது தெரியவந்தது. 

கடந்த ஐந்து மாதங்களாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த முத்துவை, நொளம்பூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் தலைமையிலான தனிப்படையைச் சேர்ந்தவர்கள் நேற்று கைது செய்தனர். அவனிடம் அதிகமான நகைகள் இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், சாலிகிராமத்தில் சந்தோஷ்குமார் வீட்டில் நகை பணத்தை கொள்ளையடித்ததையும் கொள்ளையன் முத்து ஒப்புக்கொண்டான். 

சென்னை அயப்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி,  திருமணம் மேடை அலங்காரம் உள்ளிட்ட வேலையை செய்து வரும் முத்துவின் மீது, ஏற்கனவே நான்கு கொள்ளை வழக்குகள் உள்ளன. தனி ஆளாக வீடு புகுந்து கொள்ளையடிப்பதில் கைதேர்ந்த முத்து, பணம் நகை ஆகியவற்றை கொள்ளையடித்ததும் சேலம், ஈரோடு போன்ற இடங்களுக்குச் சென்று பதுங்கிவிடுவது தெரியவந்துள்ளது. 

மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்காவது சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்திலும் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை தவிர தமிழகத்தில் வேறு எங்கெல்லாம் இவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது பற்றியும் போலீசார் தகவல் சேகரிப்பில் இறங்கியுள்ளனர். 

நாமெல்லாம் சம்பாதிப்பதே கையில் நிற்காத நிலையில், இவர்களெல்லாம் எப்படி தான் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார்களோ தெரியவில்லை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com