சிறுவன் உதட்டில் முத்தம்: மன்னிப்பு கேட்ட தலாய்லாமா.

சிறுவன் உதட்டில் முத்தம்: மன்னிப்பு கேட்ட தலாய்லாமா.

ரு சிறுவனுடன் தலாய்லாமா உரையாடும் வீடியோ வைரலாகி சர்ச்சைக்கு வழிவகுத்த நிலையில் தற்போது தலாய்லாமா மன்னிப்பு கூறியுள்ளார். 

திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய்லாமா மிகவும் அறியப்பட்ட ஒரு மதிப்பிற்குரிய ஆன்மீகத் தலைவர். திபெத்தில் நடைபெற்ற சீனாவிற்கு எதிரான கிளர்ச்சி தோல்வியில் முடிந்த பின்னர், அவர் அங்கிருந்து வெளியேறி 1959ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் வசித்து வருகிறார். சீனாவின் கண்ணில் படாமல் தப்பித்த அவர், இமயமலையைத் தாண்டி இந்திய எல்லைக்கு 15 நாட்களுக்குப் பிறகு நடந்தே வந்தடைந்தார். அந்த 15 நாட்களும் அவர் குறித்த எந்த தகவலும் இல்லாமல் போனதால், அவர் இறந்து விட்டார் என மக்கள் பேசும் நிலையும் அப்போது ஏற்பட்டிருந்தது. 

சமீபத்தில் வைரலான ஒரு காணொளியில் திபத்தைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா, ஒரு மைனர் சிறுவனின் உதட்டில் முத்தமிடுகிறார். பின்பு தனது நாக்கை வெளியே நீட்டி அந்த சிறுவனிடம் அதை உறுஞ்சுமாறு கூறுவதைக் கேட்க முடிகிறது. தனது வார்த்தைகளால் அச்சிறுவன் புண்பட்டிருக்கக் கூடும் என எண்ணி, அந்த சிறுவன், அவனது குடும்பத்தினர் மற்றும் உலகம் முழுவதுமுள்ள தனது நண்பர்களிடம் தலாய்லாமா மன்னிப்பு கேட்க விரும்புவதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அறிக்கையில் அவர் பேசிய விஷயத் திற்காக மன்னிப்பு கேட்பதாக வெளிப்படையாக கூறப் படவில்லை. தலாய்லாமா அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலாய்லாமா தன்னை சந்திக்க வரும் மக்களிடம் அவ்வப்போது கள்ளங்கபடமின்றி விளையாட்டுத்தனத்துடன் சீண்டுவார் என்றும், பொதுவெளியில் கேமரா முன்பு கூட இப்படிதான் அடிக்கடி நடந்து கொள்வது வழக்கம் என்றும், எனினும் இந்த நிகழ்வு குறித்து அவர் வருந்துவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. 

இந்த சம்பவம் பிப்ரவரி 28ஆம் தேதி தரம்சாலா தலாய்லாமா கோயிலில் நடந்ததாகத் தெரிகிறது. ஒரு ரியல் எஸ்டேட் பவுண்டேஷன் சார்பாக நடத்தப்பட்ட பயிற்சி திட்டத்தை நிறைவு செய்த 120 மாணவர்களுடன் தலாய்லாமா அன்றைய தினம் உரையாடியிருக்கிறார். இது தொடர்பாக அந்த பவுண்டேஷன் மார்ச் மாதம் சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்களில், தலாய்லாமா அந்த சிறுவனை கட்டிப்பிடித்த புகைப் படமும் இடம்பெற்றது. 

சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ள அந்த வீடியோவில், முதலில் அந்த சிறுவன் தலாய்லாமாவிடம் நீங்கள் என்னை கட்டிப்பிடிக்க முடியுமா என்று கேட்கிறார். அதற்கு தலாய்லாமா தனது கன்னத்தை காட்டி முதலில் இங்கே என சொல்கிறார். அந்த சிறுவன் அவரது கன்னத்தில் முத்தமிடுகிறார். பின்னர் தலாய்லாமா அந்த சிறுவனை அனைத்து கொள்கிறார். அதன்பின்னர் அந்த சிறுவனின் கையைப் பிடித்தவாறு தனது உதட்டையும் காட்டி இங்கேயும் கூட என நினைக்கிறேன் என்கிறார். அதையடுத்து அந்த சிறுவன் உதட்டில் முத்தமிடுகிறார். பின்னர் தனது நாக்கை வெளியே நீட்டியவாறு என்னுடைய உதட்டை உறிஞ்சு என சொல்கிறார். உடனே சிலர் சிரிப்பதை அந்த காணொளியில் பார்க்க முடிகிறது. 

திபெத்தில் நாக்கை வெளியே நீட்டுவது என்பது வணக்கம் சொல்வது போன்ற ஒரு முறையாகும். இந்த கலாச்சாரம் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து அங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வீடியோ வைரலான பின்பு, சமூக வலைதளங்களில் தலாய்லாமா குறித்து பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.  தலாய்லாமா அந்த சிறுவனிடம் முறையற்ற வகையில் நடந்து கொள்கிறார் என்றும், அந்த சிறுவனை அது நிச்சயம் அச்சுறுத்தி இருக்கும் என்றும், ஒரு ஆன்மீக குருவாக அவர் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது எனவும் பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்திருந்தனர். 

தலாய்லாமா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த 2019 ஆம் ஆண்டு கூட ஒரு நேர்காணலில் எதிர்காலத்தில் யாராவது பெண் தலாய்லாமா வந்தால், அவர் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்று கூறியதால் சர்ச்சை வெடித்தது. அதன் பின்பு அப்போது மன்னிப்பும்  கேட்டுக்கொண்டார் தலாய்லாமா என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com