வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்ய மகாநதி கரையில் அமைந்துள்ளது கெங்கையம்மன் கோயில். இந்தக் கோயிலின் சிரசு திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது. மகாவிஷ்ணு அம்சமான பரசுராமர் தனது தாயின் தலையை வெட்டி மீண்டும் உயிர்ப்பித்த புராணக் கதையின் அடிப்படையில் இந்த சிரசு திருவிழா வருடம்தோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலி ஆட்டம் ஆகிய பாரம்பரிய கலைகள் முன்செல்ல, அம்மன் சிரசு ஊர்வலம் பக்தர்கள் வெள்ளத்தில் பவனியாகக் கொண்டு செல்லப்பட்டது. இந்தத் திருவிழாவில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, ஆந்திரா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்ததால் குடியாத்தம் நகரம் முழுவதும் திருவிழாக்கோலமாகக் காட்சி அளித்தது.
பக்தர்கள் வெள்ளத்தில் அம்மனின் சிரசு கொண்டு செல்லப்பட்டபோது, ஆங்காங்கே நின்று அம்மன் சிரசை பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிரசு ஊர்வலம் நடைபெற்ற வழிநெடுகிலும் கெங்கையம்மனுக்கு பூமாலை சாத்தியும், கற்பூரம் ஏற்றியும் தேங்காய்கள் உடைத்தும் பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் கெங்கையம்மன் கோயில் சிரசு மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் அம்மன் சிரசு பொருத்தப்பட்டது. அதன் பிறகு சிறப்பு பூஜைகளும், அதனைத் தொடர்ந்து கண் திறப்பு நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடந்தேறியது.
அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். சிரசு ஊர்வலம் தொடங்கிய முத்தாலம்மன் கோயிலில் இருந்து கங்கையம்மன் கோயில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் இந்த ஆண்டு இருந்தது. சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் இன்று அம்மன் சிரசு ஊர்வலம் மற்றும் கோயிலில் அம்மனை தரிசனம் செய்தனர்.
இந்தத் திருவிழாவை முன்னிட்டு காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோயில் திருவிழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க பாதுகாப்புப் பணியில் 2 எஸ்.பி.,க்கள், 5 ஏடிஎஸ்பி-க்கள், 13 டிஎஸ்பிகள் உள்பட 1,700 காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், கோயில் திருவிழாவுக்கு பாதுகாப்புக்காக வந்த பெண் காவலர் ஒருவருக்கு, அங்கு அடிக்கப்பட்ட உடுக்கை சத்தத்தை கேட்டு அருள் வந்துவிட்டது. பக்திப் பரவசத்தில் உணர்ச்சி வசப்பட்டு ஆடிய அந்தப் பெண் காவலரை மற்ற போலீசார் மிகவும் சிரமப்பட்டு பிடிக்க முயன்றனர். கோயில் திருவிழா பாதுகாப்புக்காக வந்த பெண் காவலர் ஒருவர் அருள் வந்து சாமியாடிய வீடியோ இணைய தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.