கோவையில் கிருஷ்ணா கல்லூரியில் சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக கட்டுமான நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் வெளிமாநில தொழிலாளர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது.
நேற்று தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது, பழைய மதில் சுவரின் அஸ்திவாரம் திடீரென வலுவிழந்து இடிந்து விழுந்தது. இதனால், தொழிலாளர்கள் 6 பேர் இடிபாடுகளில் சிக்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த வெளிமாநில தொழிலாளர்கள் 4 பேரின் உடல்களை மீட்டனர்.
பலத்த காயமடைந்த 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கண்ணையன், ஜெகநாதன், சச்சிம் மற்றும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த பிபில் போயால், பருன் கோஸ் ஆகியோர் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குனியாமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விபத்து நேரிட்ட நிலையில், சம்பவ இடத்தை மாநகராட்சி மேயர் கல்பனா மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பார்வையிட்டனர். விபத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என கல்லூரி தரப்பில் அலட்சியமாக பதிலளித்ததாக மேயர் கல்பனா குற்றம்சாட்டினார்.
இதன் பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.தொடர்ந்து பேசிய அவர், விபத்து தொடர்பாக ஸ்ரீனிவாசா கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.