கிருஷ்ணகிரி வெடி விபத்து: நீதி விசாரணை நடத்த சிறப்பு நீதிபதி நியமனம்!

கிருஷ்ணகிரி வெடி விபத்து: நீதி விசாரணை நடத்த சிறப்பு நீதிபதி நியமனம்!
Published on

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள பட்டாசு குடோன் ஒன்றில் நேற்று முன்தினம் காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 15ம் அதிகமானோர் காயமுற்றனர். இந்த சம்பவம் குறித்து, நீதி விசாரணை நடத்திட சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதியாக, குருபரப்பள்ளி சிப்காட் நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தியை நியமித்து, மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு உத்தரவிட்டு இருக்கிறார்.

அதனையடுத்து, வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் விசாரணை அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அதுமட்டுமின்றி, விபத்து நடந்த இடத்தின் அருகே இருக்கும் குடியிருப்புகளில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் இந்த விபத்து குறித்துக் கேட்டறிந்து, அதனை எழுத்துபூர்வமாகவும் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, இந்த வெடி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை அளிக்கவும் உள்ளனர். மேலும், பட்டாசு வெடி விபத்து நடந்த இடத்தில் இன்று (31.7.2023) பொக்லைன் உதவியுடன் அங்கு சிதறிக்கிடந்த பொருட்கள் அகற்றப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், ‘சம்பவ இடத்தின் அருகில் நடைபெற்று வந்த ஒரு ஓட்டலில் வெடித்த கேஸ் சிலிண்டரே இந்த வெடி விபத்துக்குக் காரணம்’ என்று தடயவியல் நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவுத் துறை அமைச்சருமான சக்கரபாணி தெரிவித்திருந்தார். இதற்கு, அந்த ஓட்டல் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். வெடி விபத்து குறித்து விசாரணை நடத்திட சிறப்பு நீதிபதி பவணந்தி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டபோது, பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரின் குடும்பத்தினர், "எனது தாயார் ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை எதிரேயும், நேதாஜி சாலையிலும் ஓட்டல்கள் நடத்தி வந்தார். விபத்துக்குள்ளான ஓட்டலில் சமையல் செய்வது கிடையாது. உணவுகளை வேறு ஒரு இடத்தில் தயாரித்து,. இங்கே கொண்டு வரப்படும். விபத்து நடந்த ஓட்டலில் தோசை, ஆம்லேட் போன்றவை தயாரிப்பதற்கு மட்டுமே சிலிண்டர் அடுப்பு பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில், பட்டாசு வெடி விபத்துக்கு சிலிண்டர்தான் காரணம் என கூறுவது மிகுந்த வேதனையளிக்கிறது.

வெடி விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து எனது தாய் சடலமாக மீட்கப்பட்டபோது அவரது உடலில் தீ காயங்கள் இல்லை. கடையின் மேற்கூரை, சுவர் இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. மேலும், மீட்புப் பணியின்போது சிலிண்டரை முழுமையாக இடிபாடுகளில் இருந்து எடுத்து இருக்கின்றனர். கடையில் இருந்த திண்பண்டங்கள், பொருட்கள் அனைத்து சேதமாகி உள்ளதே தவிர, தீ பரவியதற்கான பாதிப்புகள் எதுவும் இல்லை. அப்படியிருக்க, வெடி விபத்துக்கு எங்கள் ஓட்டலில் வெடித்த சிலிண்டர்தான் காரணம் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கெனவே தாயை இழந்து தவிக்கும் எங்கள் குடும்பத்தின் மீது வீண் பழிபோடதீர்கள். சிலிண்டர் வெடித்திருந்தால் எனது தாய் உடல் சிதறிருக்க வேண்டும். எனவே, வெடி விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com