ஸ்டாலின் அரசு மதுவிலக்கை கொண்டுவரும் என கே.எஸ் அழகிரி நம்பிக்கை!

ஸ்டாலின் அரசு மதுவிலக்கை கொண்டுவரும் என கே.எஸ் அழகிரி நம்பிக்கை!

தி.மு.க ஆட்சியில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் புழக்கத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்கேடு அடைந்திருப்பதாகவும் இது குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்கும்படி நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.கவினர் ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலம் சென்றது தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து தி.மு.கவின் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி கருத்து தெரிவித்திருக்கிறார்.

அ.திமு.கவினர் குற்றச்சாட்டு தவறானது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து விட்டது என்றும் தமிழக அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை என்று அ.தி.மு.கவினர் தவறாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தமிழக அரசு சிறப்பாகத்தான் செயல்பட்டு வருகிறது. கள்ளச்சாராயத்திற்கு எதிராக அரசு தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து கைது நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

7 கோடி மக்கள் வாழும் மாநிலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கத்தான் செய்யும். ஆனால், அரசு அதையெல்லாம் வேடிக்கை பார்க்காமல் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அ.தி.மு.க. சொல்வது போல் மதுவை அரசே ஆதரிக்கிறது என்பதெல்லாம் தவறானது. இதை அரசியலாக்க நினைக்கிறார்கள். தமிழக மக்கள் இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொள்கைக்கு என்று தனி பாரம்பரியமே உள்ளது. பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது மதுவிலக்கு அமலில் இருந்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் கள் மற்றும் சாராயம் விற்பதற்கு அரசே கடைகளை திறந்தது. ஆனால், தமிழகத்திலும், குஜராத்திலும் மட்டும் மதுவிலக்கு அமலில் இருந்தது.

இது பற்றி காமராஜரிடம் கேட்டபோது, இன்னொருவர் தவறு செய்தால் அதே தவறை நானும் செய்யவேண்டுமா? ஒரு காலத்திலும் தமிழ்நாட்டில் சாராயக்கடைகளை அனுமதிக்க மாட்டேன் என்றார். அதனால்தான் அவரை கருப்பு காந்தி என்று மக்கள் அழைத்தார்கள். இன்றும் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வரப்படவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் அத்தகைய எண்ணமுண்டு.

அவரோடு உரையாடியபோது இது பற்றி நான் அறிந்து கொண்டேன். படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பததான் அவரது நிலைப்பாடு, எந்த விஷயத்தையும் அரசு உடனே செய்துவிட முடியாது. அப்படிச் செய்தால் ஏராளமான எதிர்வினைகள் உருவாகும். தி.மு.க. அரசின் கொள்கையும், மது விலக்கு என்பதாக இருக்கிறது. எனவே தமிழகத்திலும் மது விலக்கை கொண்டு வருவார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

மது விலக்கை அமல்படுத்த கோரி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கும் திட்டமும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

காமராஜர் ஆட்சி பற்றி பேசி வந்த காங்கிரஸ் கட்சி, அதையெல்லாம் மறந்துவிட்டு காமராஜர் செய்வதையும் ஸ்டாலினே செய்துவிடுவார் என்கிற புள்ளியில் வந்து நிற்கிறது. தனித்து நிற்பதை பற்றியெல்லாம் நினைக்காமல், தி.மு.கவின் கூட்டணிக்கட்சியாகவே இருந்துவிடலாம் என்கிற முடிவில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருப்பது தெரிகிறது என்கிறது, கமலாலய வட்டாரம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com