மாலத்தீவில் காலநிலை மாற்றத்தால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகையால் சீன அரசு 1,500 டன் குடிநீரை மாலத்தீவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
சீன அரசு தற்போது தொடர்ச்சியாக இலங்கை, மாலத்தீவு என சில நாடுகளுக்கு உதவி செய்து வருகிறது. அதுவும் மாலத்தீவைப் பொறுத்தவரை நவம்பர் 2023ம் ஆண்டு அதிபர் மொஹமெட் முய்ஸூ பதவியேற்றதிலிருந்தே சீன அரசும் மாலத்தீவும் நல்ல உறவில் உள்ளனர். அதேபோல் மாலத்தீவுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான உறவு சற்று கலக்கத்துடன்தான் உள்ளது.
அந்தவகையில் திபெத்தில் உள்ள பனிப்பாறைகளிலிருந்து தண்ணீர் பெற்று சீன அரசு மாலத்தீவுக்கு வழங்கியுள்ளது. இதனையடுத்து மாலத்தீவு அரசு குடி நீர் வெற்றிகரமாக வந்துவிட்டது என்றுத் தெரிவித்துள்ளது. இது திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தின் தலைவர் யான் ஜின்ஹாய் மாலத்திவிற்கு சென்றபோது எடுத்த முடிவாகும்.
சீனா மாலத்தீவுக்குக் கொடுத்த நீர் மிகவும் தூய்மை, தெளிவு மற்றும் தாதுசெழுமை கொண்டதாகும். ஏனெனில் இது தூய்மை பனிப்பாறையிலிருந்து எடுக்கப்பட்ட குடிநீராகும். மேலும் திபெத் உயர்தர ப்ரீமியர் பிராண்டு தண்ணீரை உற்பத்தி செய்வதில் புகழ்பெற்றதாகும்.
அதேபோல் சமீபத்தில் கையொப்பம் இட்ட ஒப்பந்தத்தின் கீழ் மாலத்தீவுகள் சீனாவின் ராணுவத்திடமிருந்து இலவசமாக ராணுவ உபகரணங்களையும் பயிற்சியையும் பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் சீனாவின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்பிற்கான அலுவலகத்தின் துணை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஜாங் பாகுன் மற்றும் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் தலைவர் ரென் ஷெங்ஜூன் ஆகியோருடன் அதிபர் முய்ஸு சந்தித்தப் பிறகு செய்யப்பட்டது.
மாலத்தீவுகளில் 26 பவளப்பாறைகள் மற்றும் 1192 தீவுகள் ஆகியவை பவளப்பாறைகள் மற்றும் மணல் திட்டுகளால் ஆனவை. இந்தக் காலநிலை மாற்றத்தால் நிலத்தடி நீர்மட்டம் தற்போது குறைந்துள்ளது. குடிநீருக்கும் கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதனையடுத்துதான் சீனா குடிநீரை மாலத்தீவிற்கு வழங்கியிருக்கிறது. மாலத்தீவில் சீனாவின் உதவி தொடர்க்கதையாகவே உள்ளது. மாலத்தீவின் நகர்ப்புற மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.