லால் பஹதூர் சாஸ்திரி நினைவு தினம்! 'ஜெய் ஜவான், ஜெய் கிஸான்'!

லால் பஹதூர் சாஸ்திரி நினைவு தினம்! 'ஜெய் ஜவான், ஜெய் கிஸான்'!

இன்று இந்திய சுதந்திரத் திருநாட்டின் இரண்டாவது பிரதமர் மறைந்த லால் பஹதூர் சாஸ்திரி அவர்களின் நினைவு தினம். இவர் இந்திய அரசியல் வரலாற்றில் மறக்க இயலாத ஒப்பில்லா தலைவர். இந்திய சுதந்தரத்திற்காக பாடுபட்ட முக்கிய சுதந்திர போராட்ட வீரர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1964 மே மாதம் காலமானார். பிறகு, லால் பஹதூர் சாஸ்திரி இந்தியக் குடியரசின் பிரதமராக பதவியேற்றார். இவருக்கு முன் இடைக்கால பிரதமராக, 'குல்சாரி லால் நந்தா' பிரதமராக 14 நாட்கள் மட்டும் பதவியிலிருந்தார்.

லால் பஹதூர் சாஸ்திரி அவர்கள், 1904ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தில் மொகல்சாரி என்ற கிராமத்தில் சாரதா ஸ்ரீவத்சவா ராம்துலாரி தேவி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சிறு வயதிலிருந்தே நாட்டின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். தன் பதினாறு வயதில் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கக் கொள்கைளால் ஈர்க்கப்பட்டார். காந்தி காசி, வித்யா பீத் போன்ற இடங்களில் கல்வி பயின்றார். சிறந்த சமூக ஆர்வலராகவும், இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து மிக சிறந்த அரசியல்வாதியாகவும், கல்வியாளராகவும் இருந்தார். இளம் வயதில் 'குருநானக்'கின் வரிகள் இவருக்குப் பிடிக்கும்.

இவர் மூன்றாவது பிரதமராக 1964 சூன் 9 முதல் ஜனவரி 11, 1966 வரைப் பதவியிலிருந்தார். ஜுன் 9, 1964 முதல், ஜூன் 18, 1964 வரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். 4 ஏப்ரல் 1961 முதல், 29 ஆகஸ்டு 1963 வரை உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 1951 முதல் 1956 வரை ரயில்வே அமைச்சராக பதவியிலிருந்தார். 1957 முதலே நடுவண் அரசில் பல பதவிகளை வகித்து சிறப்பாக செயலாற்றியவர்.

1915ஆம் ஆண்டு வாரணாசியில் மகாத்மா காந்திஜி அவர்களின் உரையை கேட்ட பின்பு தன் வாழ்க்கையை நாட்டுக்கு அர்பணித்தார். இந்திய சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் அவர்களைப் போற்றினார். சாதிப் பிரிவைப் பிடிக்காத இவர் தன் பெயருக்குப் பின்னால் இருந்த சிறி வத்ஸவா என்ற சாதிப் பெயரை நீக்கினார். 1921 ஆம் ஆண்டு காந்தி 'ஒத்துழையாமை இயக்கம்' நடத்திய போது அதில் பங்கு கொண்டு சிறை சென்றார். சிறையில் தள்ளக்கூடிய வயது இல்லை என்பதால் அவரை விடுதலை செய்து விட்டனர். மக்கள் சமுதாயத்தில் இணைந்து முசாபர்பூர் பட்டியல் இனத்தவருக்காக அரும் பாடுபட்டார். அந்த இயக்கத்தின் தலைவராகவும் ஆனார்.

1921ல் லலிதா தேவி எனும் அம்மையாரை கை பிடித்தார். வரதட்சணையாக, கதர், ராட்டை ஆகியவற்றைப் பெற்றார். 1930ல் 'உப்பு சத்யா கிரகப் போராட்ட'த்தில் கலந்துக் கொண்டு இரண்டறை ஆண்டுகளாக சிறையிலிருந்தார். 1940ல் சுதந்திர இந்தியா வேண்டி தனிநபர் சத்யாகிரகம் இருந்ததால் ஒண்ணரை ஆண்டு சிறையில் இருந்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துக் கொண்டதால் ,1946 வரை சிறையில் தள்ளப்பட்டார். 9 ஆண்டுகளாக இவரின் வாழ்க்கை சிறையிலேயே கழிந்தது. சிறையில் இருந்த போது பல அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியவர்களைப்பற்றி நன்கு அறிந்துக் கொண்டார். 'மேரி கியூரி' அம்மையாரின் வாழ்க்கை வரலாறை ஹிந்தியில் மொழி பெயர்த்தார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின், அதிலுள்ள பிரச்னைகளை தீர்க்க ரஷிய அதிபர் அலெக்ஸிகோசிமின் ஏற்பாட்டில், தாஷ்கண்டில், லால் பகதூர் சாஸ்திரி அவர்களும், பாகிஸ்தான் அதிபர் அயூப்கானும் கலந்து கொண்டார்கள். ஏழு நாட்கள் ஒரு முடிவு ஏற்படாத நிலையில், ரஷ்ய அதிபர் கோசிமின், இருநாட்டுத் தலைவர்களையும் அழைத்துப் பேசி, ஜனவரி 10, 1966 அன்று 'தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில்' கையெழுத்திடச் செய்தார்.

அன்று இரவு ரஷ்யப் பிரதமர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்டு அறைக்குத் திரும்பியவருக்கு, மூச்சுத் திணறலும், மார்பு வலியும் ஏற்பட்டு கொஞ்ச நேரத்தில் உயிர் பிரிந்து விட்டது. இரவு 1.32க்கு லால் பகதூரின் உயிர் பிரிந்து விட்டதாக அறிவிக்கப் பட்டது. பதவியில் உள்ள போதே வெளிநாட்டில் இறந்த ஒரே பிரதமர் இவர்தான். இவரின் இந்த மரணம் பல சந்தேகங்களுக்குள்ளானது.

விமானம் வரை பாகிஸ்தான் அதிபர் அயூப்கானும், ரஷ்ய அதிபர் கோசிமின்னும், லால் பகதூர் சாஸதிரியின் உடலை சுமந்து வந்து, இந்தியாவிற்கு வழி அனுப்பி வைத்தார்கள். 'சாஸ்திரி இல்லாமல் உலகமே சிறுத்து விட்டது' என அமெரிக்க அதிபர் ஜான்ஸன் தனது இரங்கற் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவிற்கு உடலைக் கொண்டு வந்த பின்னர், ராஜ்காட்டில் காந்திஜி கல்லறைக்கு அருகிலேயே புதைக்கப்பட்டார். இவரது கல்லறையில் 'வாழ்க போர்வீரன், வாழ்க விவசாயி' என்னும் பொருள்படும், 'ஜெய் ஜவான், ஜெய் கிஸான்' என்ற வாசகங்கள் பொறிக்கப் பட்டன.

எத்தனைப் பதவிகள் வகித்தாலும் சொந்தமாக வீடு கூட இல்லாமல்தான் வாழ்ந்தார் வாரிசுகளுக்கு கார் வாங்கிய கடனை விட்டு சென்றார். அவ்வளவு எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com