

2025-ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் கர்ப்பிணி பெண்கள் பாராசிட்டமால் (paracetamol/Tylenol) எடுத்தால் அது குழந்தைகளில் ஆட்டிசம் , ADHD போன்ற நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு காரணமாகும் என்று மக்களுக்கு எச்சரிக்கை தந்திருந்தார்.இது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
டிரம்பின் இந்த கருத்து சரியான விஞ்ஞான ஆதாரமின்றி தவறான விளக்கத்தை அடிப்படையாக் கொண்டது என The Lancet Obstetrics, Gynaecology & Women’s Health என்ற பிரபல மருத்துவ ஆய்வுக் இதழில் வெளியான புதிய ஆய்வு தெளிவாகக் கூறி மக்களின் சந்தேகத்துக்கு தீர்வு தந்துள்ளது.
பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளில் பாரசிட்டமால் (Paracetamol) முக்கிய இடம்பெறும். இந்த மாத்திரைகள் காய்ச்சல் குறைக்கும் (Antipyretic) உடம்பில் உயர்ந்த வெப்பத்தை (fever) குறைக்க உதவும். மேலும் தலைவலி உடல்வலி போன்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வலிகளை குறைக்க உதவும் வலி நிவாரணி (Analgesic)யாகவும் இருக்கிறது.
உலகெங்கும் இந்த மாத்திரையை நம்பிக்கையுடன் பயனாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் மாத்திரை குறித்த டிரம்பின் எதிர் கருத்து அனைவராலும் கவனிப்பட்டது. கர்ப்ப காலத்தில் அல்லது குழந்தை பருவத்தில் பாராசிட்டமல் பயன்படுத்துவது ஆட்டிசம் (Autism) ஏற்பட வாய்ப்புள்ளதாக சில ஆய்வுகள் சொல்கின்றன என்றும் இந்த மாத்திரை விஷயத்தில் அரசும் மருந்து நிறுவனங்களும் மக்களை தவறாக வழிநடத்துகின்றன என்ற கருத்தை முன்வைத்தார்.குறிப்பாக, அமெரிக்க FDA போன்ற அமைப்புகள் இதைப் பற்றி எச்சரிக்கை விடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த விஷயத்தை தெளிவு படுத்த தி லான்செட் (The Lancet) உள்ளிட்ட நம்பகமான மருத்துவ இதழ்கள் ஆய்வுகளை மேற்கொண்டு பாராசிட்டமல் மற்றும் ஆட்டிசம் இடையே நேரடி காரண–விளைவு தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தி ட்ரம்ப் மக்களிடையே ஏற்படுத்திய அவசியமற்ற பயத்தை போக்கியுள்ளது.
நுட்பமான ஐரோப்பிய ஆய்வாளர்கள் முன் மேற்கொள்ளப்பட்ட உயர்தர ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு Lancet நடத்திய மொத்த மதிப்பீட்டுப் பணியில் (meta-analysis) பராசிட்டமால்/அசியட்டமினோபீன் பயன்பாடு மற்றும் ஆட்டிசம், ADHD அல்லது தவறான வளர்ச்சியை ஊக்குவிக்கும் எந்தவொரு சான்றும் இல்லை என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
டிரம்ப் மற்றும் சில அமைப்புகள் முன்வைத்த கருத்துக்கள் அறிவியல் சான்றுகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பெரும்பாலான சுகாதார ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் அறிவுறுத்துகின்றனர்.
இருப்பினும் குடலில் பிரச்சினை உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது சிறு குழந்தைகள்/கர்ப்பிணி பெண்கள் போன்றோர் மருத்துவரின் அறிவுரையின்றி அதிக அளவில் இந்த மாத்திரையை பயன்படுத்தக்கூடாது என்றும் அதிக அளவில் எடுத்தால் லிவர் பாதிப்பு (Liver damage) ஏற்படக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுவாக 500mg – 1000mg ஒரு தடவையில்; 4 மணிநேரம் இடைவெளியில் (ஒரு நாளில் அதிகபட்சம் ~3000mg) எடுக்கவேண்டும் எனவும் சிறார்கள் அவர்கள் வயது மற்றும் எடைக்கு ஏற்ப மருத்துவர் ஆலோசனையுடன் இந்த மாத்திரையை பயன்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
கர்ப்ப காலத்தில் பாராசிட்டமாலைத் தவிர்க்கத் தகுந்த காரணம் இல்லை எனவும் நம்பகமான ஆய்வுகளின் மைய தரவுகளும் தெளிவான ஆராய்ச்சியும் இதையே ஆதரிக்கின்றன என்றும் மருந்தை தவிர்க்காமல் அளவாகவும் மருத்துவர் ஆலோசனையுடனும் பயன்படுத்த வேண்டும் எனவும் தி லான்செட் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.