மாயமான நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய சமீபத்திய தகவல்.

மாயமான நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய சமீபத்திய தகவல்.
Published on

டைட்டானிக் கப்பலைப் பார்க்கச் சென்று மாயமான நீர் மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியின்போது, ஆழ் கடலிலிருந்து சில சத்தங்கள் சிக்னலாகக் கிடைத்ததாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தேடுதல் பணிக்காக சோனார் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 1912 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் சவுத் ஹாம்டன் நகரிலிருந்து நியூயார்க் நகரை நோக்கி 'டைட்டானிக்' என்ற சொகுசுக் கப்பல் புறப்பட்டது. இதில் 2000-க்கும் அதிகமான நபர்கள் பயணம் செய்தனர். ஆனால் இந்த சொகுசு கப்பல், வடக்கு அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தபோது, ராட்சச பனிப்பாறையில் மோதி, இரண்டு துண்டாக உடைந்து கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன் பிறகு 1985ல் தான் உடைந்த டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல் ஆய்வாளர்கள் நீர்மூழ்கிக் கப்பலில் சென்று, டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை ஆய்வு செய்து வந்தனர். 

இந்த விபத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டைட்டானிக் என்ற திரைப்படம், 1977 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, சில சுற்றுலா நிறுவனங்களும் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, ஆழ்கடலுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்கு, அமெரிக்காவின் 'ஓசன்கேட்' என்ற நிறுவனம் நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கியது. 

இந்த நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தி கடலில் 8 நாள் பயணச் சுற்றுலாவிற்கு, ஒரு நபருக்கு ரூபாய் 2 கோடி வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரரான ஹமிஷ் ஹார்டிங் உட்பட 5 பேர் கொண்ட குழு நீர்மூழ்கிக் கப்பலில் டைட்டானிக்கின் சிதைந்த பாகங்களைக் காண அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்ட சில மணி நேரங்களில், கட்டுப்பாட்டறை உடனான தொடர்பை முற்றிலுமாக இழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அந்த நீர்மூழ்கிக் கப்பலோடு எவ்வளவோ தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

காணாமல் போன நீர் மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் கனடா, அமெரிக்க நாட்டின் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்களைப் பயன்படுத்தியும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இறுதியாக நீர்மூழ்கிக் கப்பலின் சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தைச் சுற்றி தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

இந்நிலையில் தான் ஆழ்கடல் பகுதியில் ஏதோ ஒரு சத்தம் கேட்டதை கனடாவின் கண்காணிப்பு விமானம் கண்டறிந்தது. சோனார் கருவியிலும் இந்த சத்தம் பதிவானதால், சத்தம் வந்த இடத்தை நோக்கி மீட்புக் குழுவினர் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் மாயமான அந்த நீர்மூழ்கி கப்பல் எங்கும் தென்படவில்லை. 

இன்று காலையோடு நீர்மூழ்கிக் கப்பலில் இருக்கும் ஆக்சிஜன் தீர்ந்துவிடும் என்பதால், அதை விரைவாக கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அதில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் பல கேள்விகள் எழுந்து வருகிறது. அதாவது ஆபத்துக் காலங்களில் எமர்ஜென்சியாக வெளியேற முடியாத எந்த பாதுகாப்பு வசதியும் இல்லாத நீர்மூழ்கி கப்பலில், மனிதர்கள் கடலுக்குள் செல்ல யார் அனுமதித்தது? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் நீர்மூழ்கிக் கப்பல் மாயமானதற்கான பல காரணங்களும் நிபுணர்களால் சொல்லப்பட்டு வருகிறது. 

அதில் குறிப்பாக மின்சாரம் தடைப்பட்டதனால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என நீர்மூழ்கி வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இதுபோன்ற பல கேள்விகளுக்கு மத்தியில் நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com