தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க பா.ஜ.க கட்சியினர் முயற்சி செய்வதாகவும், அதை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க தவிர்த்த தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டார்கள்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்படுவதாக குறிப்பிட்ட திருமாவளவன், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து தி.மு.க. அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் 90 வயதான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் காரைச் சூழ்ந்து அச்சுறுத்துவதை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது. அரசு கவனக்குறைவாக இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது என்றார்.
ஒருவேளை காவல்துறை பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ என்று சந்தேகப்படவேண்டியிருப்பதாகவும், தமிழகத்தின் காவல்துறை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவேண்டும் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடாது என்று விரும்புவதாகவும் குறிப்பிட்ட திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். பா.ஜ.க மற்றும் பா.ம.க இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், ம.தி.மு.க. தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
தி.மு.க கூட்டணிக்கு புதிய வரவான மக்கள் நீதி மய்யம் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.கவுக்கு எதிரான அணியை தி.மு.க ஒருங்கிணைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த திருமாவளவன் அதற்கான காரணங்களையும் பதிவு செய்திருக்கிறார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடைபெறும்போது வன்முறைகள் கட்டவிழ்த்துப்படும். அதே போல தமிழகத்திலும் தேர்தல் நெருங்கினால் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. அத்தகையதொரு ஆபத்தை முதல்வருக்கு சுட்டிக்காட்டத்தான் கூடியிருப்பதாக திருவாளவன் விளக்கம் தந்திருக்கிறார்.
பா.ஜ.க எதிர்ப்பில் தி.மு.க தீவிரம் காட்டவேண்டும் என்று தி.மு.கவின் கூட்டணிக்கட்சிகள் விரும்புகின்றன. பிரதமருடனான உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ள நிலையில், பா.ஜ.க எதிர்ப்பில் தான் உறுதியாக இருப்பதாகவும், பா.ஜ.கவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி தலைமையில் கூட்டணி அமையவேண்டும் என்று விரும்புவதாக நேற்று பிறந்தநாள் விழாவில் முதல்வர் பேசியிருக்கிறார். இது தோழமைக் கட்சிகளை ஆசுவாசப்படுத்தும் என்கிறது, அறிவாலய வட்டாரம்.