தமிழரை பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் அலுவல் மொழியாக்கவும் - அமித்ஷாவுக்கு கனிமொழியின் பதிலடி!

தமிழரை பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் அலுவல் மொழியாக்கவும் - அமித்ஷாவுக்கு கனிமொழியின் பதிலடி!

சமீபத்திய அமித்ஷாவின் சென்னை வருகையும், தமிழரை பிரதமராக்குவது குறித்து அவர் பேசியதும் தி.மு.க வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் தமிழகத்திற்கு கிடைத்தவை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுவாரா என்று அவரது வருகைக்கு முன்னரே முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

வேலூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கேள்விகளுக்கு பதிலடி தந்த அமித்ஷா, மத்தியில் 14 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதை தி.மு.கவினர் முதலில் விளக்கட்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதாவது குறித்து கேள்வி எழுப்பும் தி.மு.கவினர், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஏன் எய்ம்எஸ் மருத்துவமனை கட்டுவதற்கான எந்த முயற்சியையும் செய்யவில்லை என்பதையும் விளக்கட்டும் என்றார்.

தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை தவறவிட்டுள்ளோம். அதற்கு முழுக் காரணமும் தி.மு.க.தான். காமராஜர், மூப்பனார் ஆகிய இரண்டு பேர் பிரதமராவதை தி.மு.க தடுத்திருக்கிறது. வரும் காலங்களில் ஒரு தமிழனை பிரதமராக்க பா.ஜ,க கட்சி உறுதி எடுத்திருக்கிறது என்றார், அமித்ஷா. இதுதான் தி.மு.க வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

1996ல் ஐக்கிய முன்னணி ஆட்சியில் 20 எம்.பிக்களை வைத்திருந்த த.மா.கவும் பிரதமர் ரேஸில் இருந்தபோது, தி.மு.கவிடமிருந்து ஆதரவு கிடைக்காத காரணத்தால் மூப்பனாருக்கு கிடைக்கவேண்டிய பிரதமர் வாய்ப்பு தேவகௌடாவுக்கு போனதாக சொல்லப்படுவதுண்டு. 40 எம்.பிக்களை வைத்திருந்த இடதுசாரிகளும் 140 எம்.பிக்கைளை வைத்திருந்த காங்கிரஸ் கட்சியும் மூப்பனாரை ஆதரிக்க முன்வந்தும் சாத்தியப்படவில்லை.

ஒருவேளை தி.மு.க ஆதரவு தந்திருந்தால் அப்போது ஐக்கிய முன்னணி கட்சியின் கன்வீனரக இருந்த சந்திரபாபு நாயுடுவும் மூப்பனார் பிரதமராக ஆதரவு தந்திருப்பார் என்று சொல்லப்பட்டதுண்டு. ஆனால், காமராஜர் பிரதமராவதை தி.மு.க தடுத்துவிட்டதாக அமித்ஷா பேசியதுதான் பா.ஜ.க தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 1967 மற்றும் 1971 காலகட்டங்களில் அப்படியொரு வாய்ப்பு காமராஜருக்கு கிடைக்காத நிலையில் அமித்ஷா ஏன் அப்படி குறிப்பிட்டார் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் தமிழரை பிரதமராக்குவது பற்றிய அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ள நிலையில், தி.மு.கவின் மகளிரணி தலைவியும் எம்.பியுமான கனிமொழியும் தன்னுடைய கருத்தை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். தமிழரைப் பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழ் மொழியை முதலில் ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அங்கீகரித்து அமலுக்கு கொண்டுவாருங்கள், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரியுங்கள் என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com