சொல்லாததையும் செய்வோம்... ஏன், சொல்லாமலும் செய்வோம் - முதல்வர் ஸ்டாலின்

சொல்லாததையும் செய்வோம்... ஏன், சொல்லாமலும் செய்வோம் - முதல்வர் ஸ்டாலின்

ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பதிலுரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,

தி.மு.க அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்த ஒன்றரை ஆண்டுக்கால ஆட்சியில், அரசால் எத்தனை அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன, அதில் எத்தனை செய்துமுடிக்கப்பட்டிருக்கின்றன, அறிவிப்புகளின் மொத்த மதிப்பு எவ்வளவு என்பவற்றைச் சட்டமன்றத்தில் இன்று பட்டியலிட்டார்.

 முடிவுற்ற மொத்தப் பணிகள் 7,430. இவற்றின் மொத்த மதிப்பு 3,050 கோடி ரூபாய். இதுவரை அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கப்பட்ட மொத்தப் பணிகள் 13,428. இவற்றின் மொத்த மதிப்பு 4,744 கோடி ரூபாய். இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்கீழ் தமிழ்நாடு முழுவதும் இதுவரை அனைத்து அரசுத் துறைகளின் சார்பில் 2,57,850 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆளுநர் உரை அறிவிப்புகள் 75. என்னால் சட்டமன்ற பேரவை விதி 110-ன்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் 67.

மாவட்ட விழாக்களில் செய்த அறிவிப்புகள் 88. மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு அறிவிப்புகள் 5, செய்தி வெளியீடு அறிவிப்புகள் 154, நிதிநிலை அறிக்கைகள் 254, வேளாண்மை நிதிகள் அறிக்கைகள் 237, அமைச்சர்களால் மானியக் கோரிக்கைகள் மூலம் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் 2,424, இதர அறிவிப்புகள் 42, இதுவரை மொத்தம் 3,346 அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதில் 86 சதவிகித அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன. அதாவது 2,892 அறிவிப்புகளுக்கு அரசாணை அறிவுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

 அதில் 852 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 240 பணிகள் நடைபெற்றுவருகின்றன. 422 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடத் தொடர்புடைய துறைகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 32 அறிவிப்புகள் குறித்த கருத்துகள் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

 பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அண்மையில் மாநிலங்களுடைய வளர்ச்சிகள் குறித்து ஆய்வுசெய்து வெளியிட்டிருக்கக்கூடிய சமூக வளர்ச்சி குறியீட்டு அறிக்கையில், 63.3 புள்ளிகள் பெற்று இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது. ஒன்றிய அரசுதான் இதைச் சொல்லியிருக்கிறது.

 பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வேளாண் மின் இணைப்புகள் 2.20 லட்சம் மட்டுமே. ஆனால் இந்த அரசு 15 மாத காலத்தில் வழங்கிய மின் இணைப்புகள் 1,50,000. `சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்' இது கலைஞருடைய முழக்கம். தமிழ் மக்களின் நலன் என்று வந்துவிட்டால் சொல்லாததையும் செய்வோம்... ஏன், சொல்லாமலும் செய்வோம் என்பதுதான் என்னுடைய முழக்கம்"

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின்  ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com