மொழியாக்கம் : பத்மினி பட்டாபிராமன்
நம் மனதுக்கும் உடலுக்கும் எது சரியாக இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டு அதன்படி பழக்கிக் கொண்டோம் என்றால் நமக்கே நம்மைப் பற்றிய ஒரு நல்ல மதிப்பீடும் சுய மரியாதையும் நிச்சயமாக ஏற்படும்.
ஆரோக்கியமான வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது அல்லவா?
மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற தீய வழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீள்வது வெகு கடினம்.
நலமாக வாழ பல வழிகள் உள்ளனவே...
கொடிய நோய்கள் மற்றும் நீண்ட காலம் வதைக்கும் நோய்கள் தாக்காமல் இருக்க நல்ல வாழ்க்கை முறை உதவுகிறது. நல்ல பழக்கவழக்கங்கள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
ஒருவரது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அவர்கள் எந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
ஜங்க்ஃபுட் எனப்படும் சுகாதாரமற்ற உணவை உண்பதையும் இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
நல்ல உடற்பயிற்சி, தேவையான அளவு தூக்கம், சரிவிகித உணவு இவை ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவை.
நீங்கள் இதிலிருந்து மாறுபட்டு வாழ்ந்து கொண்டிருந்தீர்கள் என்றால், உடனே திருத்திக்கொண்டு நல்ல பழக்கங்களுக்கு மாறி விடவும்.
நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முக்கியமான ஐந்து பழக்கங்கள் தேவை.. அவை என்ன தெரியுமா?
1. நல்ல உடற்பயிற்சி.
அன்றாட அலுவல் மட்டும் போதாது. தினசரி கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பது மிக முக்கியம். உடலின் பல பாகங்களுக்கு தகுந்தாற்போல பலவிதமான உடற்பயிற்சிகள் அவசியம். காலை, மாலை நடைப் பயிற்சி ஆரோக்கியத்துக்கு மிக நல்லது.
2. மன அழுத்தம்
அளவுக்கு அதிகமன மன அழுத்தம், உங்கள் மன நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியது. மன நலம் குன்றினால் உடல் நலத்தை மிகவும் பாதிக்கும். அதீத உணர்ச்சிகளக் கட்டுப்படுத்தவும், மனச்சோர்வு வரும்போது நல்ல மனநிலைக்குத் திரும்பவும் தெரிந்து கொள்ள வேண்டும்.
3. காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்.
காலை உணவு மிக அவசியம். அதுதான் நாள் முழுவதும் நாம் இயங்கத் தேவையான சக்தியைத் தருகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் தவிர்க்கக் கூடாது. மற்ற வேளை உணவுகளை விட காலை உணவில் அதிக சத்தை உடல் எடுத்துக்கொள்கிறது.
4. தேவையான தூக்கம் மிக முக்கியம்
நமது தூக்க முறைகள்தான் நம் உடல், மன நலங்களைத் தீர்மானிக்கிறது. சரியாகத் தூங்காதபோது நாள் முழுக்க மந்தமான நிலையும் எரிச்சலான மன நிலையும் இருக்கும். சரியான நேரப்படி தூங்கும் வழக்கம் இல்லை என்றால் அது உடல், மன நலத்துக்குக் கேடு. இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதும் நல்லதல்ல.
5. ஆரோக்கியமான உணவு
நலமான உடல் வேண்டுமென்றால் நம் உணவும் நன்மை தரக்கூடியதாக, உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கொண்ட சரிவிகித உணவாக இருக்க வேண்டும் நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் நாம் உண்ணும் சரிவிகித உணவுக்கு பெரும் பங்கு உண்டு.
7S FORMULA என்று ஒன்று உள்ளது. அது என்ன தெரியுமா?
SMOKING -- என்னும் புகை பிடிக்கும் பழக்கத்தை உடனே நிறுத்த வேண்டும்
SUGAR -- உண்ணும் உணவில் இனிப்பு அளவோடு இருக்க வேண்டும்
SALT -- உப்பை குறைக்க வேண்டும்.(உணவு மேஜையிலே உப்பை வைக்கவே கூடாது)
STRESS -- மன அழுத்தமோ சோர்வோ அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது.
SEDENTARINESS – சோம்பேறித்தனத்தை விட்டு, தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
SLEEP -- நல்ல தூக்கம் தேவை என்ற விழிப்புணர்வுடன் இருங்கள்.
SMILE -- மகிழ்ச்சி என்பது எல்லோரிடமும் பரவக் கூடியது. எனவே என்றும் மகிழ்வான மன நிலையில இருங்கள்
வாழ்க நலமுடன்!