‘பதக்கங்களை கங்கையில் வீசுவோம்’ மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவிப்பு!

‘பதக்கங்களை கங்கையில் வீசுவோம்’ மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவிப்பு!

பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டில் அவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுககக் கோரி கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக மல்யுத்த வீராங்கனைகள் பல்வேறு வகைகளில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவின்போது, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாகச் சென்றபோது அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தற்போது, தங்களுக்கு நியாயம் வேண்டி போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஒன்று சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். அதில், ‘இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது பதக்கங்களை இன்று மாலை ஆறு மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம். எங்கள் கழுத்தை அலங்கரித்த இந்தப் பதக்கங்களுக்கு இனி எந்த அர்த்தமும் இல்லை என்று தெரிகிறது. அதைத் திருப்பித் தருவதை நினைக்கும்போது எங்களைக் கொல்வது போல இருக்கிறது.

அந்தப் பதக்கங்களை நாங்கள் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை. அவை மல்யுத்த கூட்டமைப்பின் பிரச்சாரத்துக்கான முகமூடியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பதக்கங்களை இழந்த பிறகு, தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை என்றாலும், சுயமரியாதையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. ஒரு பெண்ணான குடியரசுத் தலைவர், 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். எங்களுக்காக எதுவும் பேசவில்லை. அதனால் குடியரசுத் தலைவரிடம் அந்தப் பதக்கங்களைத் திருப்பிக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.

எங்களை மகள்கள் என்று அழைக்கும் பிரதமரிடம் ஒப்படைக்கலாமா என்றால் அவர் இந்த மகள்களைப் பற்றி ஒருமுறைகூட அக்கறை காட்டவில்லை. மாறாக, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் நம்மை அடக்கி ஆளும் தோரணையோடு போட்டோகளுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  நாங்கள் போராட்டம் செய்தால் எங்களை சிறையில் அடைக்கிறார்கள்" என்றும் அந்தக் கூட்டறிக்கைக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை போராட்டத்தின் முன்னணி வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் தங்கள் ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com