ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படைக்கக் கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம்!

ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படைக்கக் கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம்!
Published on

மிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தின் ஜாமீனில் வெளியே வந்தார். அதைத் தொடர்ந்து அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 2016ம் ஆண்டு இறந்து போனார். அதன் பிறகு அவரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்தும், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனையை உறுதி செய்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதையடுத்து, ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடக் கோரிய சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தியின் மனுவைத் தொடர்ந்து, கர்நாடக நீதிமன்றம் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட உத்தரவிட்டதோடு, அதற்காக கிரண் ஜவாலி என்ற அரசு வக்கீலையும் நியமித்தது. இந்த நிலையில், அந்த மனு மீதான விசாரணையின்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சார்பில் ஆஜரான வக்கீல் சத்யகுமார், ‘ஜெயலலிதாவின் சொத்துக்களை, அவரது வாரிசான தன்னிடம்  ஒப்படைக்க வேண்டும்’ என கோரி இருந்தார். அப்போது நீதிபதி மோகன், ‘சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் வாரிசுகளுக்கு சேராது’ என்று கூறி இருந்தார். மேலும்,  ‘ஜெயலலிதாவின் பொருட்கள் கர்நாடக அரசு கருவூலத்தில் இல்லை. ஜெயலலிதாவிடம் இருந்து சில முக்கியமான பொருட்கள் மட்டுமே, பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. மற்ற பொருட்கள் பட்டியலில் மட்டுமே இணைக்கப்பட்டு உள்ளன’ என்று நீதிபதி கூறி இருந்தார்.

அதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட உண்மையான சொத்துக்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற இருப்பதாக, நரசிம்மமூர்த்தி கூறி இருந்தார். இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படைக்கக் கோரி, தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கர்நாடகா அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்  கிரண் எஸ்.ஜவாலி கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், ‘குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தபடி ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ தங்க, வைர நகைகள் தவிர மற்ற எதுவும் கர்நாடகா நீதிமன்றத்தில் இல்லை. விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட 28 வகையான பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக, தமிழகத்தின் முதலமைச்சராக 1991 முதல் 1996 வரை இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையால் சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்ட வழக்கின் முடிவில், சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com