நாம் பனி ஹோட்டல் போன்ற எத்தனையோ விசித்திரமான ஆடம்பரமான ஹோட்டல்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இப்போது அதைவிடவும் விசித்திரமான நூலக ஹோட்டலை பற்றித்தான் தெரிந்துக்கொள்ளவுள்ளோம்.
புத்தகப் பிரியர்களுக்கு ஒரு அறை முழுக்க புத்தகம் கொடுத்தாலே அவர்களுக்கு சொர்க்கம் போல் இருக்கும். அதுவும், சுற்றிலும் பச்சை பசேலென்று, இதமான காற்றுடன், சூரிய ஒளி ஜன்னல் மூலம் உள்ளே வர, நேரா நேரத்திற்கு ஒரு டீ, இவற்றுடன் ஒரு புத்தக அறை என்றால், ஆஹா! அப்படியிருக்கும். ஹோட்டல் என்றால், நாம் காசு கொடுத்து எவ்வளவு நாட்கள் வேண்டுமென்றாலும் தங்கிக்கொள்ளலாம், இதுவே நூலகம் என்றால், குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னால், இருக்க முடியாது. இதனைக் கருத்தில்கொண்டும், புத்தகப் பிரியர்களை மேலும் சந்தோஷப்படுத்தும் விதமாகத்தான் ஜப்பான் ஒரு ஹோட்டலை கட்டியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டே ஜப்பான் டோக்யோவில் உள்ள இக்புகுரோ ( Ikebukuro ) என்ற மாவட்டத்தில் கட்டப்பட்டது. இங்கு நீங்கள் புத்தகம் படித்து முடித்தவுடன் உடனே கிளம்ப வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. அருகில் உள்ள அனைத்து Publishing இடத்திலிருந்தும் இந்த இடத்திற்கு புத்தகங்கள் இறக்கப்பட்டுவிடும் என்பதால், அதிக புத்தகம் உள்ள ஹோட்டல் இதுதான். அங்கு மெத்தை உட்பட ஒரு தனி நபருக்கு தேவையான அனைத்துமே இருக்கும்.
அங்கு மணி கணக்கில் தங்கி அடுத்தடுத்த புத்தகங்களை படிக்கலாம். கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம், ஹோட்டலை சுற்றிப்பார்க்கலாம். பிடித்த இடத்தில் உட்கார்ந்துப் படிக்கலாம். தனி தனி அறைகள் இருக்காது. பெரிய பெரிய ரூம்கள் புத்தக அலமாறிகளுடன் இருக்கும். நூலகத்தில் இருக்கும் டேபில்களுக்கு பதிலாக மெத்தை வைக்கப்பட்டிருக்கும். அருகில் யாராவது படித்துக்கொண்டிருந்தால், திரைச்சீலை வைத்து மறைத்துக்கொண்டு தூங்கலாம்.
ஆனால், இங்கு ஒவ்வொன்றுக்கும் பணம்தான் வேறுபட்டிருக்கும். இந்த நூலக ஹோட்டல் ஒரு முழு வடிவ ஹோட்டல் இல்லை என்றாலும், இங்கு வந்து படிப்பதற்கு அந்த ஊர் மக்கள் விரும்புகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இந்த இடம் ஒரு சுற்றுலா தலமாகவும் இருந்து வருகிறது. ஒரு நாளைக்கு முழுவதும் இங்குத் தங்கி படித்து ஓய்வெடுத்து எப்போது வேண்டுமென்றாலும் செல்லலாம்.