உத்தரப் பிரதேச மாநிலத்தில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தெருநாய் எந்த காரணமும் இல்லாமல் ஒருவரைக் கடித்தால், அது உடனடியாகப் பிடிக்கப்பட்டு, 10 நாட்கள் விலங்குகள் நல மையத்தில் வைக்கப்படும். அங்கு அதற்கு கருத்தடை செய்யப்பட்டு, அதன் உடலில் ஒரு மைக்ரோசிப் பொருத்தப்படும். அந்தச் சிப்பில் நாயின் அனைத்து விவரங்களும் இருக்கும். இது முதல் முறை கடிக்கும் நாய்களுக்கு பொருந்தும்.
அதே நாய் மீண்டும் இரண்டாம் முறை ஒருவரைக் கடித்தால், அது வாழ்நாள் முழுவதும் அதே மையத்தில் அடைக்கப்படும். இது நாய்களுக்கு அளிக்கப்படும் ஆயுள் தண்டனை போல கருதப்படுகிறது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நாய்களை யாராவது தத்தெடுக்கலாம். ஆனால், அப்படி தத்தெடுப்பவர்கள் ஒரு பிரமாணப் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும். அதில், அந்த நாயை மீண்டும் தெருவில் விட மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும். மீறி நாயை விட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு நாய் கடித்ததால் யாராவது ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், அந்தச் சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்படும். அதன் பிறகு, அந்த நாய் விலங்குகள் நல மையத்திற்கு கொண்டு செல்லப்படும்.
நாய் கடித்தது ஆத்திரமூட்டப்பட்டதா, இல்லையா என்பதை ஒரு குழு முடிவு செய்யும். இந்தக் குழுவில் கால்நடை மருத்துவர், விலங்குகள் நிபுணர் மற்றும் மாநகராட்சி அதிகாரி ஆகியோர் இருப்பார்கள். ஒரு நாய் மீது கல் எறிந்து, அது கடித்தால், அது ஆத்திரமூட்டப்பட்டதாகக் கருதப்படும். எனவே, அதற்குத் தண்டனை கிடையாது.
சமீபத்தில் ஆக்ரோஷமான மற்றும் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களைத் தவிர, மற்ற தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, அவை பிடிபட்ட இடங்களிலேயே மீண்டும் விடலாம் என்று உத்தரவிடப்பட்டது. மேலும், பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பதைத் தடைசெய்து, ஒவ்வொரு நகராட்சி வார்டிலும் பிரத்யேக உணவு மண்டலங்களை உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.