உயிருக்கு உலை வைக்கும் ‘நிக்கோடின் பவுச்’: பொதுமக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

தமிழக அரசு
தமிழக அரசு
Updated on

புகைப்பிடித்தல், குட்கா மற்றும் புகையிலை மெல்லும் பழக்கத்திற்கு மாற்றாகப் பலர் தற்போது வாயில் வைத்துச் சுவைக்கும் 'நிக்கோடின் பவுச்' (Nicotine Pouch) எனும் பொருளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் இந்தப் பொருளுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படாத நிலையிலும், பல்வேறு இணையதளங்கள் வாயிலாக இது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அங்கீகரிக்கப்படாத பொருட்கள் உடல்நலத்திற்குப் பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுவதோடு, சட்டவிரோத விற்பனையால் இளைய தலைமுறையினர் இதன் பிடியில் சிக்க வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : சட்டவிரோத விற்பனை தொடர்பாக, சம்பந்தப்பட்ட இணையதள நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. எனவே, வாயில் சுவைக்கும் 'நிக்கோடின் பவுச்' பயன்படுத்துவதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

இந்த தயாரிப்புகளை, வாயில் சுவைக்கும்போது, நிக்கோடின் ரத்த ஓட்டத்தில் நேரடியாக கலக்கிறது. கட்டுப்பாடற்ற நிக்கோடின் நுகர்வு மற்றும் அதிகப்படியான நிக்கோடின் உட்கொள்ளல், மோசமான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும்.

உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், இணையதள சந்தை நடத்துவோர், வினியோகஸ்தர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள், அங்கீகரிக்கப்படாத வாயில் வைக்கும் 'நிக்கோடின் பவுச்' உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல், விற்பனைக்கு காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பான சந்தேகங்கள் அல்லது புகார்களுக்குத் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தை 94458-65400 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com