வரும் 22ம் தேதி வீடுகளில் “ராம ஜோதி” ஏற்றுங்கள்:பிரதமர் மோடி!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

யோத்தி ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேக தினத்தன்று மக்கள் தங்கள் வீடுகளில் அகல் விளக்கு கொண்டு ராம ஜோதி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் ஏழ்மை என்னும் இருளை நீக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் ஆலய கும்பாபிஷேக விழா  வரும் 22ம் தேதி திறப்பு விழா விமரிசையாக நடைபெற உள்ளது. பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள அந்த கோயில் திறப்பு விழா காண உள்ளதை ஒட்டி பக்தி பரவசமான சூழல் உருவாகி இருக்கிறது. அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். அந்த ராம ஜோதி நமது நாட்டின் ஏழ்மையைப் போக்க நம்மை ஊக்குவிக்கும்.

நமது நாட்டில் வறுமையை ஒழிப்போம் என்ற கோஷம் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், வறுமை முற்றாக ஒழியவில்லை. வறுமையை ஒழிக்கும் நோக்கில் எனது அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. இதன் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகள் இன்று பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய எண்ணிக்கையில் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை நான் பார்க்கச் சென்றேன். நான் குழந்தையாக இருந்தபோது இதுபோன்ற ஒரு வீட்டில் வசிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஆசைப்பட்டேன். இன்று, அதுபோன்ற வீடுகளை பார்ப்பதில் திருப்தி அடைகிறேன். இத்திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நனவாகியுள்ளன. அவர்களின் ஆசியே எனக்கு மிகப்பெரிய சொத்து.

மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில், ரூ.30 லட்சம் கோடியை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் உலக அளவில் 11-வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அடுத்து வரக்கூடிய எனது அரசின் ஆட்சிக் காலத்திற்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். இது எனது வாக்குறுதி" எனத் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com