திருப்பதியில் இருக்கும் வெங்கடேஷ்வரா விலங்குகள் பூங்காவில் ராஜஸ்தான் மாநிலைத்தை சேர்ந்த பியரஹ்லாத் என்பவர் சிங்கத்துடன் செல்பி எடுக்க சென்றபோது சிங்கம் அவரைக் கடித்து குதறியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இப்போது எங்கு சென்றாலும் எந்த இடம் என்று பாராமல், என்ன நேரம் என்று பாராமல், செல்ஃபி எடுப்பது வழக்கமாகிவிட்டது. செல்ஃபி மோகம் உயிரைப் பறிக்கும் அளவிற்கு நிலைமை சென்றுவிட்டது. மலை உச்சி, தண்டவாளம் என உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இடங்களிலெல்லாம் உயிரை விட செல்ஃபி தான் தேவைப்படுகிறது.
இப்படி செல்ஃபி மோகத்தில் திருப்பதியில் உள்ள வெங்கடேஷ்வரா விலங்குகள் பூங்காவிற்கு சுற்றிப்பார்க்க சென்ற ராஜஸ்தானை சேர்ந்த 38 வயதுடைய பிரஹ்லாத் என்பவர், சிங்கத்தின் வாயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்ஃபி எடுப்பதற்காக பிரஹ்லாத் நுழைந்துள்ளார். அப்போது சிங்கத்தை கவனித்துக்கொள்பவர் அங்குப் போக வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அதை காதில் வாங்கிக்கொள்ளாமல், சிங்கத்துடன் செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆசையில், கூண்டுக்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டி மீது ஏறியுள்ளார். அவரின் நோக்கத்தை கண்டுப்பிடித்த சிங்கத்தின் காப்பாளர் உள்ளே குதித்துவிடாதே என்று கூறியும், அவரின் பேச்சை கேட்காமல் கூண்டிற்குள்ளே குதித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் உள்ளே குதித்த அவர் சிங்கத்தை சீண்டிப் பார்த்ததால் சிங்கம் கோபத்தில் அவரைத் தாக்க ஆரம்பித்தது. அவர் எவ்வளவோ தப்பிக்க முயற்சி செய்தும், சிங்கம் அவரை கூண்டின் ஒரு பக்கம் தள்ளி கடித்து குதறியது. அதற்குள் சிங்கத்தின் காப்பாளார் மற்றும் சிலர் ஓடிவந்து சிங்கத்தை விரட்டி அடித்துள்ளனர். பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரஹ்லாத் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் யாரென்று அவரின் ஆதார் கார்டு மூலம் கண்டறியப்பட்டது. உள்ளே குதிக்கும்போது மது அருந்தியிருந்தாரா என்பதை போலிஸார் விசாரித்து வருங்கின்றனர். கடித்து குதறிய சிங்கத்தை இடம் மாற்றம் செய்துள்ளனர். மேலும் பூங்காவின் அதிகாரி கூறுகையில் "மூன்று சிங்கங்களில் இரண்டு சிங்கம் கூண்டிற்குள் தான் இருக்கும். ஒரு சிங்கம் மட்டும் தான் மக்கள் பார்வைக்கு திறப்போம். ஆனால் அப்போதும் இதுபோன்ற விபரீதங்கள் நடக்கின்றது" என்று கூறினார்.