இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) அலுவலகம், நாடு முழுவதும் விற்பனையில் உள்ள 186 மருந்துகளின் தரமற்ற தன்மையை உறுதி செய்து, அவற்றின் பட்டியலை நேற்று (ஜூன் 20, 2025) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த அறிவிப்பு, மருந்துத் துறையிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மருந்து உற்பத்தி அலகுகள் மற்றும் சந்தையில் இருந்து பல மருந்து மாதிரிகளை சேகரித்து சோதனை செய்தது. இந்த சோதனைகளில், 186 மருந்துகள் தர நிர்ணய அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், சில மருந்துகள் குறிப்பிட்ட அளவு செயலில் உள்ள பொருட்களைக் கொண்டிருக்கவில்லை என்பதும், சிலவற்றில் அசுத்தங்கள் கலந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.