நாடாளுமன்றத்தில் தொடர் அமளி:அவைக்கு வருவதை தவிர்த்த மக்களவைத் தலைவர்!

Lok sabha Speaker On birla
Lok sabha Speaker On birla
Updated on

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இருதரப்பினரின் செயல்களால் அதிருப்தி அடைந்துள்ள மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அவைக்கு வருவதை தவிர்த்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவை கண்ணியத்தை காக்கும் வகையில் செயல்பட முன்வந்தாலொழிய அவைக்கு வருவதில்லை என்கிற முடிவுடன் அவர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை அவை நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவைக்கு வரவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து மணிப்பூர் விவகாரத்தை கிளப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும். நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

பா.ஜ.க. உறுப்பினர் கீர்தி சோலங்கி அவை நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தார். அவையில் ஒழுங்கை கடைப்பிடிக்குமாறு எதிர்க்கட்சியினரை அவர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். ஆனால், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவை நடவடிக்கைள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

தேசிய தலைநகர் தில்லி எல்லை திருத்த மசோதா 2023 அவையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. ஆனால், அவையில் அமளி ஏற்பட்டதால் அது பற்றி விவாதிக்கவோ குரல்வோட்டு மூலம் மசோதாவை  நிறைவேற்றவோ முடியவில்லை.

செவ்வாய்க்கிழமை அவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்படும்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அதிருப்தி அடைந்தார்.

அவையில் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் அவைத் தலைவர் உறுதியாக உள்ளார். அதேபோல உறுப்பினர்களும் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பாகும்.

அவை நடவடிக்கைகள் குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அதிருப்தி அடைந்துள்ளது குறித்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 20 ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே நாடாளுமன்ற நடவடிக்கைகள் சரிவர நடைபெறாமல் முடங்கிப் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com