

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் கடந்த 10-ந்தேதி ஒரு வாரம் அரசுமுறை சுற்றுப்பயணமாக லண்டன் சென்றார். அங்கு அவருக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ள முதலமைச்சர் விஜய், அதன் ஒரு பகுதியாக தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த 10ஆம் தேதி முதல்முறையாக லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து 12-ம்தேதி முதலமைச்சர் விஜய் தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டர் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பதற்காக புகழ்பெற்ற உலகப்புகழ் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய திடல், பந்தய களத்தில் உள்ள உள்கட்டமைப்பு, பந்தய சுற்றுப்பாதை பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியாக நடத்தும் முறைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு 2 நாட்கள் முதலமைச்சர் விஜய் பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டிற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்தார். லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழிலை விரிவாக்கம் செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய் முன்னிலையில், சுமார் ரூ.15,300 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதிகபட்சமாக, சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், தனது பிரிட்டன் மற்றும் ஐரோப்பா கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் ரூ.11,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதுதவிர, ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனம், ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி, பிரிட்டனைச் சேர்ந்த வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த தொழில் முதலீடுகள் மூலம் ஏறத்தாழ 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய இங்கிலாந்து, ஐரோப்பா நிறுவனங்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
லண்டனில் அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசி உள்ளார். தனது ரசிகர்களை தி ஷார்ட் நட்சத்திர விடுதியில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.
இதற்கிடையே லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.