பாவம்!! கோத்தபய ராஜபட்சவின் நிலைமையைப் பாருங்க!!

கோத்தபய ராஜபட்ச
கோத்தபய ராஜபட்ச
Published on

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச 1971 இல் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னர் 1990-களில் ராணுவத்திலிருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து 1998 இல் அமெரிக்கா சென்று அங்கு குடியுரிமை பெற்று வசித்து வந்தார். 2005 இல் சகோதரர் மகிந்த ராஜபட்ச அதிபரானதை அடுத்து அவர் மீண்டும் இலங்கை திரும்பினார். அமெரிக்க குடியுரிமையுடன் மகிந்தவின் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார்.

2015 ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்த ராஜபட்ச தோல்வியுற்றார். இதற்கு பிறகு 2019 நடந்த தேர்தலில் கோத்தபய அதிபர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.

இலங்கையில் 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி வெளிநாட்டு குடியுரிமை உள்ளவர் அதிபர் தேர்தலில் நிற்கமுடியாது என்பதால் அமெரிக்க குடியுரிமையை அவர் ரத்துச் செய்தார். பின்னர் தேர்தலில் அவர் வெற்றிபெற்றார்.

கோத்தபய அதிபராக இருந்தபோது இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு கோத்தபய அரசின் தவறான பொருளாதார கொள்களைகளும் ஊழலுமே காரணம் எனக் கூறி அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் வலுத்து வன்முறையாக உருவெடுத்ததால் அதிபர் கோத்தபய சொந்த நாட்டை விட்டு தப்பிச் சென்றதுடன் பதவி விலகவும் நேரிட்டது. மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்த அவர், மக்கள் போராட்டம் ஓய்ந்தபிறகு நாடு திரும்பினார். தாய்லாந்து அவருக்கு தங்க அடைக்கலம் கொடுத்த போதிலும் அரசியல் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட தடைவிதித்தது.

கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கோத்தபய மற்றும் அவரது குடும்பத்தினர் துபாய் சென்றனர். அங்கு அரசு சலுகையில் ஓய்வறையில் தங்கலாம் என நினைத்தார் கோத்தபய. ஆனால், அவர் விடுத்த கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். இதையடுத்து அவர் துபாயில் ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

துபாயில் தங்கியிருந்த அவர், அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சலீஸ் நகரில் நிரந்தரமாக தங்கும் வகையில் அமெரிக்க விசா பெற முயற்சித்ததாகவும் ஆனால், அவரின் அந்த கோரிக்கையையும் அமெரிக்கா நிராகரித்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் துபாய் சென்றிருந்த இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் அவரது குடும்பத்தினர் ஏமாற்றத்துடன் மீண்டும் இலங்கை திரும்பினர்.

எமிரேட்ஸ் விமானம் மூலம் இலங்கையின் கொழும்பு விமானநிலையம் வந்த கோத்தபய ராஜபட்ச சிறப்பு விருந்தினர்களுக்கான வழியாக வெளியே சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தபய ராஜபட்சவுடன் அவருடைய மனைவி அயோமா ராஜபட்ச, தனிச்செயலர் சுகீஸ்வரன் மற்றும் ஒரு நபர் வந்துள்ளதாகவும் ஆனால், அவரது மகன் மனோஜ் கோத்தபய, அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் வரவில்லை என்று அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com