அல்லாவால் அனுப்பி வைக்கப்பட்டவர் தான் பகவான் ராமர்: பரூக் அப்துல்லா!

அல்லாவால் அனுப்பி வைக்கப்பட்டவர் தான் பகவான் ராமர்: பரூக் அப்துல்லா!
Published on

கடவுள் ஸ்ரீராமர் ஹிந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை. ஆனால், ராம பக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஸ்ரீராமர் பெயரை வாக்குக்காக விற்கிறார்கள் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லா கூறினார்.

இன்னும் சொல்லப்போனால் பகவான் ராமர் எல்லோருக்கும் சொந்தமானாவர். மக்களுக்கு சரியான வழியைக் காட்ட அல்லா அவரை அனுப்பிவைத்துள்ளார் என்று பாகிஸ்தான் எழுத்தாளர் ஒருவர் கூறியுள்ளதாக அவர் மேற்கோள் காட்டினார். எனினும் அந்த எழுத்தாளர் இப்போது உயிரோடு இல்லை.

ஜம்மு காஷ்மீரில் உதாம்பூர் மாவட்டத்தில் கர்னாய் என்னுமிடத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் நிறுவன தினத்தையொட்டி நடைபெற்ற பேரணிக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

“நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். பகவான் ராமர் ஹிந்துக்களுக்கு மட்டும் கடவுள் அல்ல. அவர் எல்லோருக்கும் கடவுள் போன்றவர். அதாவது முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் பகவான் ராமர் கடவுள் போன்றவர். அதேபோல அல்லாவும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கடவுள்தான்.

சமீபத்தில் காலமான பாகிஸ்தானைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் அல்லாவால் அனுப்பிவைக்கப்பட்டவர்தான் பகவான் ராமர். மக்களுக்கு சரியான பாதையை காட்டவே அவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே யாராவது நாங்கள்தான் ராமரின் பக்தர்கள் என்று சொன்னால் அதை நம்பிவிடாதீர்கள். அவர்கள் நம்மை முட்டாளாக்க பார்க்கிறார்கள். அவர்கள் ராமர் பெயரைச் சொல்லி வாக்கு பெற நினைக்கிறார்கள். உண்மையில் அவர்களுக்கு பகவான் ராமர் மீது அன்பு ஏதும் இல்லை. அதிகாரத்தின்மீதுதான் அவர்களுக்கு பற்று இருக்கிறது என்றார் பாரூக் அப்துல்லா.

சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் ராமர் கோயில் வரும் என்று தாய்மார்களிடம் கூறுவார்கள். வாக்குக்கு என்ன மதிப்பு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிரிட்டாஷாரை வெளியேற்ற சுதந்திர போராட்டத் தியாகிகள் ஒன்றிணைந்து செயல்பட்டதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் ஒருபோதும் சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்ததில்லை. பிரிட்டிஷாரை வெளியேற்றுவதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது. எனவே சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவில் வைத்திருங்கள்.

அவர்கள்தான் வாக்குரிமையை பெற்றுத் தந்தவர்கள். ஆட்சிமாற்றத்துக்கான அதிகாரம் உங்களிடம்தான் உள்ளது என்றார் பாரூக் அப்துல்லா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com