பெங்களூரில் வலம் வரும் சொகுசு ஆட்டோக்கள்!

பெங்களூரில் வலம் வரும் சொகுசு ஆட்டோக்கள்!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான நகரங்களில் மக்களிடையே மிகவும் பிரபலமானது ஆட்டோரிக்ஷாக்கள்தான். குறைந்த தொலைவு பயணம் செய்வதற்கு ஆட்டோக்கள்தான் ஏற்றது. செலவும் குறைவு என்று மக்கள் நினைக்கிறார்கள். அதேநேரத்தில் பயணிகளைக் கவர ஆட்டோ டிரைவர்களும் மூன்று சக்கர வாகனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றனர். பல்வேறு அலங்காரங்கள் மற்றும் சொகுசு வசதிகளுடன் இப்போது பெங்களூரில் ஆட்டோக்கள் வலம் வருகின்றன.

ஆட்டோக்கள் பயணிகளைக் கவரும் வகையில் தரமானதாகவும், சொகுசாகவும் இருக்க அதில் பலவண்ண எல்.இ.டி. விளக்குகள், கண்ணாடி ஜன்னல்களுடன் கூடிய கதவுகள், குஷன் இருக்கைகள், பொருள்களை வைப்பதற்கு வசதியாக டிரே டேபிள்கள், மின்விசிறிகள் உள்ளிட்ட வசதிகளை ஆட்டோ டிரைவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதுபோதாது என்று ஆட்டோவின் பின்புறம் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மற்றும் சங்கர் நாக் ஆகியோரின் போஸ்டர்களை வைத்துள்ளனர்.

நவீன சொகுசு வசதிகள் கொண்ட ஆட்டோவை விடியோவில் பகிர்ந்துள்ளார் டுவிட்டர் பயனாளர் அஜித் சஹானி. அந்த விடியோவில் “ஹலோ… இது அழகான பெங்களூரு, அழகான ஆட்டோ. இதில் நீங்கள் பயணம் செய்திருக்கிறீர்களா? என்று கேட்டுபதிவிட்டுள்ளார். அந்த விடியோவில் ஆட்டோ டிரைவர், நவீன வசதிகளை விவரிக்கிறார்.

இதனிடையே இந்த விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளூர் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பலரும் இதை பாராட்டி வருகின்றனர்.

ஒருவர், “வாவ்…இதுபோன்ற ஆட்டோக்களை இலங்கையில்தான் பார்த்துள்ளேன், இப்போது பெங்களூரில்… அழகாக இருக்கிறது” என்று கருத்து பதிவிட்டுள்ளார். “ஸ்மார்ட் சிட்டி பெங்களூருவில் ஹைடெக் வசதியுடன் ஸ்மார்ட் ஆட்டோ” பெருமையாகத்தான் இருக்கிறது என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஆட்டோ நவீன வசதிகளுடன் அழகாகத்தான் இருக்கிறது. ஆனால், கூப்பிட்டால் நிறுத்துவதில்லை. நியாயமான கட்டணமும் வாங்குவதில்லை. மீட்டரும் கிடையாது. செயலிகள் மூலம் புக் செய்தால் அதை ஏற்பதில்லை. இப்படியிருந்தால் சொகுசு ஆட்டோவில் எப்படித்தான் பயணம் செய்ய முடியும்” என்கிறார் மூன்றாமவர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஏர்கூலர் வசதியுடன்கூடிய ஆட்டோ சமூக வலைத்தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com