
உலகில் உள்ள பழமையான அரச குடும்பங்களில் ஒன்றான தாய்லாந்து அரச குடும்பத்தின் சொத்து விபரம் பற்றிய உண்மை வெளிவந்துள்ளது.
தாய்லாந்து அரச குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர்கள் ஆகும். அதாவது 3.2 லட்சம் கோடிகள். தாய்லாந்தில் இவர்களுக்கு 16,210 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் பல வணிக வளாகங்கள், கட்டிடங்கள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன. வெளிநாட்டு அரசு குடும்பம் என்றாலே நமக்கு பிரிட்டன் அரச குடும்பம், சவுதி அரச குடும்பம், புரூனே சுல்தான் என்பவர்கள்தான் ஞாபகத்திற்கு வருவார்கள். இவர்களின் அத்தியாயத்தில் உள்ள மற்றொரு பணக்கார மன்னர்தான் தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன்.
இவருக்கு சொந்தமாக 38 விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான விலை உயர்ந்த கார்கள் இருக்கிறது. இதை வைத்தே இந்த மன்னரின் ஆடம்பர வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ளலாம். இவருடைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காகவே வருடம் 524 கோடி செலவு செய்கிறாராம். தாய்லாந்து முழுவதும் இவரது பெயரில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாடகை ஒப்பந்தங்கள் இருக்கிறது. தாய்லாந்தில் இருக்கும் இரண்டாவது மிகப்பெரிய வங்கியில் 23 சதவீத பங்குகளையும், அந்நாட்டின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனமான சியாம் சிமெண்ட் குழுமத்தில் 33 சதவீத பங்குகளையும் வைத்துள்ளார்.
இவரது கிரீடத்தில் இருக்கும் ரத்தினங்களில் ஒன்று 545 காரட் கொண்ட பழுப்பு நிற கோல்டன் ஜூப்ளி வைரமாகும். இதுதான் உலகிலேயே மிகப்பெரிய விலை உயர்ந்த வைரம் என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு மட்டுமே சுமார் 98 கோடி வரை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இவர் 300க்கும் மேற்பட்ட கார்கள் வைத்திருப்பதால் பொழுதுபோக்கிற்கு குறைவில்லை.
தாய்லாந்து மன்னரின் அரச மாளிகை கிராண்ட் பேலஸ் என்று அழைக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட 23,51000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை 1782லேயே கட்டி முடித்துள்ளனர். இந்த அரண்மனையில் பல அலுவலகங்களும் அருங்காட்சியகங்களும் உள்ளது. இப்படி பலவிதமான சொத்துக்களை தன் வசத்தில் வைத்துக் கொண்டிருப்பதால், இவரும் உலக பணக்கார மன்னர்களில் ஒருவராக இருக்கிறார்.