மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் 2027–28 கல்வியாண்டில் இந்தியாவின் முதல் இந்தி-வழி MBBS கல்லூரி அமைக்கப்பட உள்ளது. ஆரம்பத்தில் 50 MBBS இடங்களை மட்டுமே இந்த கல்லூரி வழங்க உள்ளது. மேலும் இது மத்தியப் பிரதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் ஒன்றாக இருக்கும்.
மருத்துவப் படிப்பில் பிராந்திய மொழிக் கல்வியை ஊக்குவிப்பதற்கான ஒரு மைல்கல் படியாக, மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் இந்தியாவின் முதல் இந்தி-வழி MBBS கல்லூரியின் பிறப்பிடமாக மாற உள்ளது.
இந்த இந்தி வழி மருத்துவ கல்வி 2027–28 கல்வி ஆண்டில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம், மருத்துவக் கல்வி, தேர்வுகள் மற்றும் மருத்துவப் பயிற்சியை முழுவதுமாக இந்தியில் வழங்கும். இது நாட்டின் மருத்துவக் கல்வி முறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இந்தி மொழியில் MBBS கல்லூரியை அமைப்பதற்கான திட்டம் மத்தியப் பிரதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) விரைவில் தயாரிக்கப்பட்டு இறுதி அனுமதிக்காக மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மாநில அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், இந்தத் திட்டம் கட்டாய அனுமதிகளுக்காக தேசிய மருத்துவ ஆணையத்திற்கு (என்எம்சி) அனுப்பப்படும் என்றும் குழுவின் அதிகாரிகள் கூறினார்கள்.
இந்த புதிய கல்வி முறை திட்டத்திற்காக மத்தியப் பிரதேசம் ஏற்கனவே MBBS பாடப்புத்தகங்களை இந்தியில் மொழிபெயர்க்கும் பணியை தொடங்கி விட்டது.
இந்தக் கல்லூரி ஆரம்பத்தில் 2027–28 ஆம் ஆண்டில் 50 MBBS இடங்களை மட்டுமே வழங்கும். தனி மருத்துவமனையை இதற்காக கட்டாமல் ஜபல்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்ட மருத்துவமனையிலேயே மாணவர்கள் மருத்துவப் பயிற்சியை பெறுவார்கள்.
ஆரம்ப எம்பிபிஎஸ் இந்தி வழி கல்வியின் வெற்றியைப் பொறுத்து, வரும் ஆண்டுகளில் இருக்கை திறன் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.டி மற்றும் எம்.எஸ் போன்ற முதுகலை படிப்புகள் உட்பட பிற மருத்துவ திட்டங்களையும் இந்தியில் அறிமுகப்படுத்த மாநில அரசு வரும் நாட்களில் திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, ஆங்கில வழி மருத்துவக் கல்வியில் பெரும்பாலான சிரமங்களை எதிர்கொள்கின்ற இந்தி மீடியம் மாணவர்களுக்கு சிறந்த பயனை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி வெற்றியடைந்தால், இந்தி பேசும் பிற மாநிலங்களிலும் இதே போன்ற கல்லூரிகள் மேலும் உருவாக வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்தியா முழுவதும் பிராந்திய மொழி மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த திட்டம் வழி வகுக்கும்.