மத்தியப் பிரதேசம்: தக்காளி சண்டையால் வீட்டை விட்டு வெளியேறிய மனைவி!

மத்தியப் பிரதேசம்: தக்காளி சண்டையால் வீட்டை விட்டு வெளியேறிய மனைவி!
Published on

சிறிய ஹோட்டல் நடத்தி வரும் கணவர், மனைவியை கேட்காமல் சமையலுக்கு தக்காளியைப் பயன்படுத்தியதால் அவரது மனைவி கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இந்த விநோத சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் தக்காளி இப்போது ஆடம்பர பொருளாக மாறியுள்ளது.

தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விலை அதிகரித்துள்ளது. சாதாரணமாக கிலோ ரூ.20 அல்லது ரூ.30-க்கு விற்கப்படும் தக்காளி தற்போது கிலோ ரூ.100-க்கு மேல் விலை வைத்து விற்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு ஒரு கிலோ தக்காளி வாங்கியவர்கள் இப்போது விலை அதிகம் என்பதால் கால் கிலோ மட்டுமே வாங்கி வருகின்றனர்.

நாட்டில் ஒரு பகுதியில் தீவிர பருவமழையும், மற்றொரு பகுதியில் வெப்பக்காற்றும் வீசி வருகிறது. குஜராத் பகுதியில் சமீபத்தில் வீசிய புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம்தான் தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டு தக்காளிக்கு நல்ல விலை கிடைக்காததால் விவசாயிகள் சிலர் தக்காளிக்கு பதிலாக பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக சொல்லபடுகிறது.

சென்னையில் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விலை வைத்து விற்கப்படுகிறது. கர்நாடகத்தில் கிலோ ரூ.120-க்கு தக்காளி விற்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் தக்காளி விலை கிலோ ரூ.130 ஆக உள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் தக்காளி விலையை கேட்டால் நீங்கள் மயங்கி விழுந்துவிடுவீர்கள். அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்கள் தக்காளி வாங்குவதற்கே தயக்கம் காட்டி வருகின்றனர்.

தக்காளி விலை உயர்வால் உத்தரப்பிரதேசத்தில் ஒரு காய்கறி வியாபாரி தமது கடைக்கு இரண்டு பாதுகாவலர்களை நியமித்துள்ளாக்ர். வாடிக்கையாளர்கள் தக்காளி வாங்க வரும் போது பேரம் பேசுவதால் வாக்குவாதம் ஏற்படுகிறதாம். இதை சமாளிக்கவே அவர் பாதுகாவல்களை நியமித்துள்ளார்.

இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஹ்தோல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் பர்மன். இவர் சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் ஒரு நாள் இவர் சமையலுக்கு மனைவியை கேட்காமல் இரண்டு தக்காளிகளை எடுத்து பயன்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்குள் சண்டை ஏற்பட்டது. தன்னிடம் கேட்காமல் தக்காளியை பயன்படுத்தியது மனைவிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. தக்காளி விவகாரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் வலுக்கவே மனைவி கோவித்துக்கொண்டு மகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

மனைவியை பல இடங்களில் தேடியும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மூன்று நாட்களாகியும் மனைவியை கண்டுபிடிக்க முடியாத நிலையில் சஞ்சீவ் பர்மன் இதுபற்றி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

போலீஸார் எப்படியும் அவரது மனைவியை தேடி கண்டுபிடித்து ஒப்படைப்பதாக உறுதியளித்துள்ளனராம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com