
சென்னை: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், தனது மாற்றாந்தாய் மற்றும் நெருங்கிய உறவினர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், தமிழக அரசு தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தங்களது மத சடங்குகளின் ஒரு பகுதியாக தன்னை நரபலி கொடுக்கப் போவதாகத் தன் மாற்றாந்தாயும், நெருங்கிய உறவினர்களும் பேசிக் கொண்டிருந்ததை தான் கேட்க நேர்ந்ததால் மிகுந்த அச்சத்துடன் உயிருக்குப் பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்ததாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனது நண்பரும் சட்டக்கல்லூரி மாணவருமான தட்சிணாமூர்த்தியின் உதவியுடன் தான் போபாலில் இருந்து தப்பி வந்ததாகவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மனுதாரர், ஷாலினி ஷர்மா, மத்தியப் பிரதேசத்தின் ராய்சன் மாவட்டத்தில் உள்ள சோதர்பூர் கோஹர்காங்கின் நயாபுராவில் வசித்து வந்தார், தான் பாஜகவின் மாணவர் பிரிவான ஏபிவிபியின் முழுநேர ஊழியராக இருப்பதாகவும், தனது குடும்ப உறுப்பினரின் வற்புறுத்தலின் பேரில் அந்த அமைப்பில் சேர்ந்ததாகவும் அவர் கூறினார். தனது மாற்றாந்தாய் சுதா ஷர்மா மற்றும் அவரது உறவினர்கள் மத சடங்கின் ஒரு பகுதியாகத் தன்னை நரபலியிடப் போவதாகப் பேசிக் கொண்டதை தான் கேட்க நேர்ந்ததை அடுத்து வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவித்த அவர், இதற்கு முன்பு தனது பத்து வயதாக இருக்கும் போது தனது சகோதரனின் நரபலி குறித்து அவர்கள் பேசிக் கொண்டதையும் கூட தான் முன்பு கேட்க நேர்ந்ததைப் பற்றியும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்தில் முதுகலை பட்டதாரியான மனுதாரர் ஷாலினி ஷர்மா, தனது குடும்பத்தினர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தனது நண்பர் தட்சிணாமூர்த்தியை போபாலில் கைது செய்ததாகவும் கூறினார். பிறகு அவர்களிடம் இருந்து விடுபட்டுத் தப்பியோடி பிப்ரவரி 17-ம் தேதி சென்னை வந்த அவர், ராயப்பேட்டையில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகச் செயலாளரின் இல்லத்தில் தஞ்சம் புகுந்தார்.
”எனது குடும்ப உறுப்பினர்களும் ஏபிவிபியினரும் இங்கு வந்து என்னை மீண்டும் போபாலுக்கு அழைத்துச் சென்று விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அங்கு என் வீட்டில் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஷாலினி சர்மா தனது மனுவில் கூறியுள்ளார். தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், தன் குடும்பத்தினர் தன்னை வலுக்கட்டாயமாக மீண்டும் போபாலுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்கவும் தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிடுமாறு அவர்
தனது மனுவில் கோரினார். இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.