வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு..! 50 வயது பெண்ணும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற தகுதியானவரே..!

வாடகைத்தாய்
வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற...www.bbc.com
Updated on

அறிவியல் தந்த மகத்தான மாற்றங்களுள் ஒன்றுதான் வாடகைத்தாய் முறை. மழலை செல்வம் இல்லாதவர்களுக்கு வரமாக வந்த இந்த வாடகைத்தாய் முறையில் தற்போது நிறைய குழந்தைகள் பிறந்து பிள்ளை இல்லாதவர்களுக்கு வாரிசாக மகிழ்ச்சி அளித்து வருகின்றனர்.

கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் சட்டப்படி இதற்கான விதிமுறைகள் நிறைய உள்ளன.

இந்தியாவில் வாடகைத்தாய் (Surrogacy) தொடர்பான நடைமுறைகள் ஜனவரி 25 2022 முதல் அமலுக்கு வந்த சட்டத்தின் கீழ் அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளின்படி ஒழுங்குபடுத்தப்பட்டு அதன்படி நடைபெறுகிறது.

வாடகைத்தாய் சட்டம் (Surrogacy Regulation Act, 2021) கூறும் விதிகளின் படி இந்தியாவில் வணிக ரீதியிலான (Commercial Surrogacy) அதாவது, குழந்தையை சுமப்பதற்காக பணம் வாங்குவது சட்டவிரோதம். மருத்துவச் செலவுகள் மற்றும் காப்பீட்டு செலவுகள் மட்டுமே வழங்கப்படலாம் . நற்பண்பு சார்ந்த சுயநலமற்ற வாடகைத்தாய் முறைக்கு மட்டுமே சட்டம் அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறையில் குழந்தை பெறும் விருப்பமுள்ள தம்பதியர் தங்களுக்குக் குழந்தை இன்மை குறைபாடு உள்ளது என்பதற்கான மருத்துவ வாரியச் சான்றிதழை பெற வேண்டும் என்பது கட்டாயமான விதியாக உள்ளது. மேலும் இந்த சட்டத்தின் படி பொதுவாக பெண்களுக்கு 23 முதல் 50 வயது வரையிலும், ஆண்களுக்கு 26 முதல் 55 வயது வரையிலும் வரம்பு விதித்துள்ளது. ஆனால் சமீபத்தில் வந்த ஒரு தீர்ப்பில் 50 வயது முடிந்த பெண்ணும் 51 வயதை எட்டும் வரை இதற்குத் தகுதியானவர் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது பிறக்கும் போதோ, சம்பந்தப்பட்ட தம்பதியினர் தான் சட்டபூர்வ பெற்றோர் என்பதற்கான 'பெற்றோர் உரிமை மற்றும் காவல் ஆணையை' (Parentage Order) மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பெற வேண்டியது கட்டாயமாகும். இந்த விதிமுறைகள் சற்று மாறினாலும் வாடகைத்தாய் முறையில் குழந்தையை பெறும் வாய்ப்பு கிட்டாது.

இதே போல் வாடகைத்தாயாக விருப்பம் உள்ள பெண்களுக்கும் விதிமுறைகள் உள்ளன. வயது வரம்பு 25–35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதுடன் அவர்கள்

ஏற்கனவே குறைந்தது ஒரு குழந்தையைப் பெற்றிருக்க வேண்டும் என்பது முக்கியம். அதுமட்டுமின்றி வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வாடகைத்தாயாக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வணிக வாடகைத்தாய், சட்டவிரோத விளம்பரம் அல்லது விதிமுறைகளை மீறி செயல்படுவது போன்ற குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.இப்படி வாடகைத்தாய் மூலம் பிறக்கும் குழந்தை, சட்டப்படி குழந்தையை விரும்பிய தம்பதியரின் குழந்தையாகவே கருதப்படும். ஏதோவொரு காரணத்தால் குழந்தையை கைவிடுவது சட்டவிரோதம் எனவும் விதிகள் கூறுகிறது.

சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி, வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தைக்கு சட்டப்பூர்வ பெற்றோர் உரிமை (Parentage and Custody Order) வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த வழக்கு, இந்தியாவின் Surrogacy (Regulation) Act, 2021-இன் நடைமுறைகள் தொடர்பாக மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுவதால் மக்கள் இதை கவனித்து வருகின்றனர்.

நாமக்கல் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைக்கு உரிமை கோரி தொடர்ந்த வழக்கில் தகுதிச் சான்றிதழ்கள் இருந்தும் கீழ் நீதிமன்றம் தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கில் தம்பதியினர் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட பரோபகார (Altruistic) வாடகைத்தாய் முறையை பின்பற்றியதாக தெரிவித்து குழந்தை பிறப்பதற்கு முன்பே சட்டப்படி பெற வேண்டிய உரிமை மற்றும் காவல் கோரும் (Parentage and Custody Orde) தொடர்பான நடைமுறைகளில் சிக்கல் ஏற்பட்டதால் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொள்ள உள்ள குழந்தைக்கு பெற்றோர் உரிமை கோரி, நாமக்கல்லைச் சேர்ந்த தம்பதியர், நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.ஆனால், வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற உள்ள பெண்ணின் வயது 50 ஐ கடந்து விட்டதாகவும், வாடகைத்தாயாக செயல்பட உள்ள பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து, நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதி ஷமீம் அஹமது விசாரித்தார். குழந்தை பெற விரும்பும் பெண் 50 வயதை பூர்த்தி செய்திருந்தாலும், 51 வயதை அடையும் வரை சட்டப்படி தகுதியுடையவராகவே கருதப்பட வேண்டும் என்றும், மாஜிஸ்திரேட்கள், தகுதிச் சான்றிதழ்களை மறுபரிசீலனை செய்யும் மேல்முறையீட்டு அதிகாரியைப் போல செயல்பட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பெற்றோர் உரிமை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்ததுடன், மீண்டும் இந்த மனுவை பரிசீலித்து, நான்கு வாரங்களில் முடிவெடுக்க நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் வாடகைத்தாய் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பெற்றோர் உரிமை மற்றும் காவல் கோரும் மனுக்கள் மீது 4 வாரங்களுக்குள் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாடகைத்தாய்
வாடகைத்தாய்

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகளில் வாடகைத்தாய் ஒழுங்குமுறைச் சட்டம், 2021-இன் கீழ் தாக்கல் செய்யப்படும் பெற்றோர் உரிமை மற்றும் குழந்தைக் காவல் கோரும் மனுக்களை, மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் 4 வாரங்களுக்குள் விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும்

தகுதிவாய்ந்த மருத்துவ வாரியம் அல்லது உரிய அதிகாரம் பெற்ற அமைப்பு வழங்கிய தகுதிச் சான்றிதழ்களை மறுஆய்வு செய்யும் மேல்முறையீட்டு அதிகாரம் ஜுடிஷியல் மாஜிஸ்திரேட்டுகளுக்கு கிடையாது என்றும் கூறியுள்ளது.அத்துடன் தகுதிச் சான்றிதழ் வழங்கும்போதே வாடகைத்தாயின் கணவரிடம் சம்மதம் பெறப்பட்டுவிடுவதால், நீதிமன்ற விசாரணையின் போது அவரது நேரடி சாட்சியம் இல்லாவிட்டாலும் பெற்றோர் உரிமைக்கான மனுவை நிராகரிக்கக் கூடாது எனவும் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் உள்ள நிபந்தனைகள் பூர்த்தியாகியிருந்தால், தொழில்நுட்பக் காரணங்களைச் சுட்டிக்காட்டி தம்பதியரின் மனுக்களைத் தள்ளுபடி செய்யக் கூடாது எனவும் குறிப்பிட்டு நாமக்கல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

வாடகைத்தாய் தொடர்பான மனுக்களை சாதாரண மனுக்களாகக் கருத கூடாது என்றும் மிகுந்த உணர்வுப்பூர்வமாகவும் பொறுப்புடனும் கையாள வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், இதுபோன்ற நடைமுறை குழப்பங்கள் மீண்டும் ஏற்படாத வகையில், வாடகைத்தாய் சட்டத்தின் கீழ் பின்பற்ற வேண்டிய படிப்படியான செயல்முறைகளை விளக்கும் கையேட்டை தமிழ்நாடு அரசு தயாரித்து வெளியிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் இந்த உத்தரவு வாடகைத்தாய் முறையில் இருக்கும் குழப்பங்களை நீக்கும் எனவும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஜூன் 28-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்..!
வாடகைத்தாய்
logo
Kalki Online
kalkionline.com