

சமீபகாலமாக, தமிழகத்தின் நகர்ப்புறங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை பொதுமக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினையாக தெருநாய்களின் அச்சுறுத்தல் உருவெடுத்துள்ளது. அதிகாலை நேர நடைப்பயிற்சி செல்வோர், பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் எனப் பல தரப்பினரும் வீதிகளில் நடமாடவே அச்சப்படும் ஒரு சூழல் இன்று நிலவுகிறது.
இந்நிலையில், தெரு நாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. பொது இடங்களில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றம் கேள்வியையும் எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவையும் பிறப்பித்திருக்கிறது.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உள்ள நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலை சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பான இந்த வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் சுற்றுக்திரியும் தெருநாய்களைப் பிடித்து, அவற்றை மீண்டும் அதே இடத்தில் விடாமல் விலங்கு நலக் காப்பகங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
வளாகத்திற்குள் நாய்கள் நுழையாதவாறு நிறுவனங்கள் முறையான எல்லைச் சுவர்கள் மற்றும் வாயில்களை அமைக்க வேண்டும்.
1960 ஆம் ஆண்டு விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, 2023 ஆம் ஆண்டு விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு விதிகளுக்கு இணங்க கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களின் வளாகங்களில் இருந்து தெருநாய்களை உடனடியாக அகற்றி, அவற்றிற்குரிய கருத்தடை மற்றும் தடுப்பூசிக்குப் பிறகு அவற்றைக் காப்பகத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் தெரு நாய்க்கடி சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை தானாகவே முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்காக விசாரித்து தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
தெரு நாய்களுக்கு தெருக்களில் உணவளிக்கக் கூடாது என்றும், அதற்கான பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட்டு அங்கு மட்டுமே உணவளிக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை மீறி தெருநாய்களுக்கு தெருக்களில் உணவளிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் மாநில அளவில் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆராய்வதற்கு நீதிமன்றம் இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் வெறும் காகிதத்தோடு நின்று விட்டதா அல்லது ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா என்ற எண்ணத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தற்போதைய விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை பிடிப்பதற்கு இதுவரை என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது மற்றும் அது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து தெளிவான மற்றும் விரிவான அறிக்கையை அடுத்த நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.