மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை..!
மதுரை ஆதீன மடத்தின் 293 வது ஆதீனமாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஹரிஹர ஞானசம்பந்தர் தேசிக்காச்சாரியார் பதவி ஏற்றார்.
இவர் கடந்த மே மாதம் சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை - பகுதியில் அவரது கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய ஆதினம், குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள் தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும், இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது
இந்நிலையில் மத ரீதியாக மோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க பல இடங்களில் ஆதீனத்திற்கு எதிராக மனு அளிக்கப்பட்டது.இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில் மதுரை ஆதீனம் பொய்யான தகவலை பரப்பியதாக கூறி சென்னையை சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் என்பவர் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி மதுரை ஆதீனம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். "அவருக்கு 60 வயதுக்கு மேல் இருப்பதால் அவர் நேரில் ஆஜராக கட்டாயமில்லை. காவல்துறை நேரில் சென்று விசாரிக்கலாம், விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும்" என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில்,மதுரை ஆதீனத்திடம் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஆதீன மடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.சைபர் கிரைம் ஆய்வாளர் பத்மகுமாரி தலைமையிலான 3 போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.ஆதின மடத்துக்குள் பெண் காவல் ஆய்வாளர் முதன் முறையாக விசாரணைக்கு வந்ததால் மதுரை விளக்குத்தூண் காவல் உதவி ஆணையர் சூரக்குமார் உள்ளிட்ட போலீஸாரும் மடத்திற்கு வந்தனர்.விசாரணையின் போது மடத்திற்குள் ஆதீனத்தை தவிர வேறு யாரும் வரக்கூடாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.