விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை இரண்டு மாதங்களில் முடிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை இரண்டு மாதங்களில் முடிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

புதுக்கோட்டையை சேர்ந்த பொன்.காந்திமதிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தல் கும்பலால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலையத்தில் இவர் தொடர்ச்சியாக புகார் அளித்து இருக்கிறார். ஆனால், காவல் துறையினர் அது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், மணல் கடத்தல் கும்பல் இவருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த நிலையில், தனக்குப் பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்து இருக்கிறார். ஆனாலும், காவல்துறையினர் லூர்து பிரான்சிஸ்க்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. இந்த வழக்கு முறப்பநாடு காவல் ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. முறப்பநாடு காவல் ஆய்வாளர் மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு, மணல் கடத்தல்காரர்களுக்கு சாதகமாகச் செயல்பட்டு உள்ளார்.

இந்தச் சூழலில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் இந்த வழக்கை விசாரித்தால் வழக்கின் உண்மை நிலை வெளி வராது. ஆகவே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் ஸ்ரீமதி அமர்வு முன்பு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ‘வழக்கு விசாரணை முறையாகச் சென்று கொண்டிருக்கிறது‘ என கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ‘தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் கண்காணிப்பின் கீழ், துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை அதிகாரியாக சுரேஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். குற்றவாளிகள் மீது குண்டாஸ் பதியப்பட்டு இருக்கிறது. அதோடு, வழக்கு விசாரணை அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நான்கு வாரத்தில் குற்றப்பத்திரிகையை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நீதிபதி இரண்டு மாதங்களில் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு, நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

logo
Kalki Online
kalkionline.com