
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் அமைந்துள்ள மங்களநாயகி அம்மன் கோவிலில் பட்டியல் சமூக மக்களை ஒரு பிரிவினர் கோயிலுக்குள் அனுமதிப்பது கிடையாது என்றும் திருவிழாவில் பங்கேற்க விடுவதில்லை என்று கூறியும் பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார். இதில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பட்டியல் சமூக மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவது தலைகுனிவான விஷயம்.
சாமி கும்பிட அனைவருக்கும் உரிமை உள்ளது, பிறப்பால் ஒருவரை உயர்வு தாழ்வு என்று பிரித்துப் பார்ப்பதை ஏற்க முடியாது. நீதிமன்றம் ஒருபோதும் இதை வேடிக்கை பார்த்து நின்று விடாது.
பட்டியல் சமூக மக்களுக்கும் கோயிலுக்குள் நுழைய, சாமி கும்பிட, திருவிழாவில் பங்கேற்க உரிமை உள்ளது. அதை உறுதி செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் ஏதும் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் வட்டாட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம். சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் சமயத்தில் காவல்துறையினர் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களை குண்டம் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கோயிலுக்குள் செல்வதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை, இதை மீறுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.