பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் பரவசத்துடன் முழங்க பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இன்று அதிகாலை 5.52 மணிக்கு இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழு திரண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

பொதுவாக அழகர் உடுத்தும் ஆடையின் நிறத்திற்கு ஏற்ப அந்தாண்டின் அந்த வருடத்திற்கான நல்லது – கெட்டதை மக்கள் முடிவுசெய்வது ஒரு ஐதிகமாக கருதப்பட்டு வருகின்றது.  இந்நிலையில், இன்று வைகை ஆற்றில் இறங்கி கள்ளழகர் பச்சை நிற பட்டுடுத்தியிருந்தார். இதனால் இந்த வரும் இயற்கை வளம் சிறப்பாகவும், விளைச்சல் அமோகமாகவும் இருக்கும் என நம்பப்படுகிறது.

தமிழ்நாட்டின் முக்கியமாக திருவிழாவான கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மே 1-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியானில் அழகர் எழுந்தருளினார்.

அழகர்கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடிக்கொள்ளவும், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கவும் நேற்று முன் தினம் மாலையில் அழகர்மலையிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டு பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி,சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் என வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை மதுரை மாநகர எல்லைக்குள் நுழைந்த கள்ளழகருக்கு மூன்றுமாவடியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ எதிர்சேவை நடைபெற்றது. பின்னர் கோ.புதூர் மாரியம்மன் கோயில், ஆட்சியர் பங்களா,ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில் மற்றும் வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளினார். பின்னர் கோயிலுக்கு சென்ற அழகருக்கு இரவு 9 மணியளவில் அலங்காரம் களைதல் நடைபெற்றது.

பின்னர் திருமஞ்சனமாகி இரவு 10.30 மணிமுதல் 11.30 வரை தங்கக்குதிரை வாகனத்தில் அலங்காரம் , இரவு 11.30 மணி முதல் 12 மணிவரை ஆண்டாள் மாலை சாற்றுதல் மற்றும் மரியாதை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் புறப்பட்டார்..    இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் எழுந்தருளியவர், பின்னர் 100 ஆண்டுகளுக்குப்பின் ஆயிரம் பொன் சப்பரத்தேரில் எழுந்தருளினார். பின்னர் ஆழ்வார்புரம் பகுதி, வைகை வடகரை வழியாக அதிகாலை 5.52 மணிக்கு வைகை ஆற்றில் எழுந்தருளினார். அங்கு கள்ளழகரை, எழுத்தாணிக்காரத்தெரு வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்கும் சந்திப்பு நடைபெறும். வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று வரவேற்றார்.

தொடர்ந்து காலை 10.30 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் நடைபெறும். அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளுகிறார்.மே 6-ல் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கிறார், அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். அதனைத்தொடர்ந்து மே 8-ல் மதுரையிலிருந்து கள்ளழகர் அழகர்மலைக்கு திரும்புகிறார். மே 9-ல் கோயிலை சென்றடைகிறார். மே 10-ல் உற்சவ சாற்று முறையுடன் திருவிழா நிறைவுறுகிறது.

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com