
மதுரையின் அடையாளமான மாட்டுத்தாவணி ஆர்ச் இடிக்கும் பணியில் கட்டட தூண் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், பொக்லைன் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
'மதுரை வந்துவிட்டது' என மற்ற ஊர் மக்களுக்கும், மதுரையின் அடையாளமாகவும் திகழ்ந்து வந்த மாட்டுத்தாவணி ஆர்ச் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது, இந்த ஆர்ச், 5-ம் உலக தமிழ் மாநாட்டை முன்னிட்டு 1981 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதி கட்டப்பட்டது. இந்த ஆர்ச்சிற்கு நக்கீரன் தோரண வாயில் என பெயரிடப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டியாக மாறி வரும் பணியில் மதுரை விரிவாக்கப்பட்டு வருகிறது என்றே சொல்லலாம். இந்த வழியில் பல்லாயிரக்கணக்கான வாகனங்களும் ஆயிரக்கணக்கான பேருந்துகளும் கடந்து செல்லும் நிலையில் இந்த ஆர்ச் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள நக்கீரர் தோரண வாயில் மற்றும் கே.கே.நகர் மாவட்ட நீதிமன்றம் அருகேயுள்ள தோரணவாயில் ஆகிய இரண்டு தோரண வாயில்களையும் இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நக்கீரர் தோரணவாயில் கட்டிடத்தை இடிக்கும் பணியானது நேற்று இரவு தொடங்கியது. அப்போது ஆங்காங்கே சாலைகளில் போக்குவரத்து செல்லவும், பொதுமக்ககள் நடமாடவும் தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் வைத்து போக்குவரத்து காவல்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் ஒப்பந்ததாரர் மூலமாக நக்கீரர் தோரணவாயில் இடிப்பதற்காக இரண்டு பொக்லைன் இயந்திரம் மூலமாக இடிக்கும் பணி நடைபெற்றது.
அப்போது தோரண வாயில் ஒருபுறம் உள்ள தூணின் அருகே பொக்லைன் இயந்திர ஆப்ரேட்டர் இடித்த போது திடீரென தோரணவாயில் தூண் இடிந்து பொக்லைன் இயந்திரத்தின் மேலே விழுந்தது. இதில் ஜேசிபி ஆபரேட்டர் நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழ்ந்தார். மேலும் பொக்லைன் இயந்திரத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரரான நல்லதம்பி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதை சுற்றி இருந்த மக்கள் வேடிக்கை பார்ப்பதோடு, படமெடுத்தனர். அப்போது அந்த பொக்லைன் இடிந்து விழுந்த காட்சி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது,. மேலும், இடிக்கும் பணியின் போது உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால் இதுபோன்று விபத்து ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.