
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு கோலாகலமாக திருக்கல்யாணம் நடந்து முடிந்தது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய வைபவமான மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு ஆடி வீதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் சொக்கரும், மீனாட்சியும் அழகாக ஜொலித்தனர். இதனை காண பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்தனர். டிக்கெட் வைத்திருந்த பக்தர்கள் ஒரு புறமும், இலவச தரிசனத்தில் உள்ளவர்கள் ஒரு புறமும் இருந்தார்கள். வேத மந்திரங்கள் முழங்க சரியாக 8.50 மணியளவில் சொக்கரிடம் ஆசிபெறப்பட்ட மங்கள நாண் மீனாட்சி கழுத்தில் அணிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்களும் அவர்களின் தாலி கயிற்றை மாற்றி மீனாட்சி அருளை பெற்றனர்.
ஆண்டு தோறும் உலக நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக அம்மன் பட்டுடுத்தி வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பச்சை பட்டுடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பச்சை பட்டு பசுமையை குறிப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு செழிப்பாகவும், பசுமை நிறைந்ததாகவும் காணப்படும் என கூறப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், அன்னையின் திருமணத்தை காண திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகனும், தங்கையை சொக்கருக்கு தாரை வார்த்து கொடுக்க கூடலழகர் பெருமாளும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணம் முடிந்த பிறகு பக்தர்கள் மொய் எழுதி, தடபுடலாக தயாரான விருந்தில் பங்கேற்று செல்வது வழக்கம். பக்தர்களுக்காக 1700 கிலோ அரிசி, 12000 கிலோ அளவு காய்கறிகளுடன் பிரம்மாண்ட விருந்து தயாரிக்கப்பட்டது.