
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயல்வதாகக் கூறி போராட்டம் நடத்த கிளம்பிய இந்து அமைப்பு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கட்சியினருக்கு தடை விதித்து பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. சுமூகமாக இருந்த திருப்பரங்குன்றத்தில் என்ன பிரச்சனை கிளம்பியது?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவிலும் அதன் மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜபாளையத்தைச் சேர்ந்த அபு தாஹிர் என்பவர், நேர்த்திகடன் செலுத்துவதற்காக ஆடு மற்றும் இரண்டு சேவல்களுடன் தர்காவுக்கு செல்ல வந்திருந்தார். ஆனால், "மலைக்கு மேல் அனுமதிக்க முடியாது" எனக் கூறி அங்கிருந்த காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
காலம்காலமாக நேர்த்திக்கடன் கொடுப்பது வழக்கமாக உள்ளது. இப்போது தடுப்பது ஏன் என கேள்வி எழுப்பி, இதுதொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் தர்கா நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அப்போது அவர், வருவாய் கோட்டாட்சியர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக தர்கா நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.
இதனை அறிந்து கடந்த ஜனவரி மாதம் 22-ஆம் தேதி தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ்கனி, திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றிருந்தார். அப்போது அவருடன் வந்தவர்கள், மலையின் படிக்கட்டில் அமர்ந்து அசைவ பிரியாணி சாப்பிட்டதாக பாஜகவும் இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் வேல் ஊர்வலம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையை காக்க பிப்ரவரி 4ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி அறிவித்தது. இதனால் மதுரையில், 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் தடையை மீறி பலரும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என இறங்கியதால் காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் அப்பகுதி மக்களோ, இந்து முஸ்லீம் சகோதரர்களாக பழகி வருகிறோம் என்றும், வெளி மக்கள் தான் இந்த பிரச்சனையை கிளப்புகிறார்கள் எனவும் கூறி வருகின்றனர்.