மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் உள்ள ஒரு பெட்டியில் திடீரென சிலிண்டர் வெடித்து விபத்தல் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
லக்னோவிலிருந்து ராமேஸ்வரத்துக்கு ஆன்மீக சுற்றுலா வந்த ரயில், வேறு ரயிலுக்கு மாற்றப்படுவதற்காக மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில் 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பொதுவாக வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய ஆன்மீக தளங்களை சுற்றிப்பார்க்க ஏராளமான வடமாநில சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
அப்படி பயணம் செய்யும் அவர்கள் வெளி உணவு தவிர்ப்பதற்காக ஏராளமான சமையல் பாத்திரங்கள், அடுப்பு, இன்டக்ஷன் ஸ்டவ் மற்றும் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களையும் தங்களுடன் எடுத்துச்செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் நாட்டில் உள்ள எந்த ரயில்களிலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்ல கூடாது என சட்டம் உள்ளது. இதனை மீறுவோர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்கப்படும்.
ஆனால், வடமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ரயில்வே நிர்வாகத்தை சட்டத்திட்டங்களை நடைமுறையில் கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் நிதர்சனமாக உள்ளது. மேலும், வடமாநிலங்களில் ரயில்களில் அடிக்கடி கொள்ளைச் சம்பவம் நடைபெறுவது வழக்கம். இதனால், ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளில் தங்களுடைய ரயில் பெட்டியை பூட்டி வைப்பது வாடிக்கை.
இந்நிலையில்தான், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து தென்மாநிலங்களில் உள்ள ஆன்மீக தளங்களுக்கு அழைத்துச்செல்லும் சுற்றுலா ரயில் 180 பயணிகளுடன் கடந்த 17ம் தேதி தமிழகம் வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆன்மீக தளங்களுக்கு சுற்றுலா அழைத்து வந்த ரயிலில் ஒரு குடும்பத்தினர் தடையை மீறி ரயிலில் சிலிண்டர் எடுத்து வந்துள்ளார்.அதுவும் மூன்று சிலிண்டர்கள்.
இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5.15 மணியளவில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போடி ரயில் நிலையத்தில் வேறு பெட்டியை இனைப்பதற்காக ரயில் நின்றுள்ளது. அப்போது ரயிலில் பயணித்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்வே நடைபாதையில் இறங்கி அமர்ந்துள்ளனர்.
அப்போது ஒரு பெட்டியில் இருந்த நபர் ஒருவர் இன்று காலை தேனீர் போடுவதற்காக முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து சிதறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவி ரயில் பெட்டி முழுவதும் எரிந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் இதில் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு அதிகாரிகள், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், சம்பவம் நடந்த இடத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாகவும் மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் காயம் அடைந்தவர்களை ரயில்வே மருத்துவ குழுவினர் மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ரயில்வே மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. உயிரிந்தவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணமும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சார்பில் 3 லட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் பயணிக்கும் போக்குவரத்துகளில் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துவரக்கூடாது என்பது சட்டமாக இருந்தாலும், அதனை கருத்தில்கொள்ளாமல் சிலிண்டர்களை எடுத்துவந்த பயணிகளும், பத்து நாட்களுக்கு மேலான ஆன்மீக சுற்றுலா செல்லும் ரயிலில் சிலிண்டர்கள் எடுத்துவரப்பட்டுள்ளது என தெரிந்தும் அதனை கண்டுக்கொள்ளாத ரயில்வே நிர்வாகத்தினர் அலட்சியமும் என ஒவ்வொரு தனிநபர்களும் சட்டத்தை மதிக்காமல் செய்த செயலாளல் இன்றைக்கு 9 பேர் பலியாகியுள்ளனர் என்பதே சோகம்.