ஆண்களின்றி பெண்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்.

ஆண்களின்றி பெண்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்.
Published on

கென்யாவில் ஆண்களின்றி பெண்கள் மட்டுமே தனித்து வாழ்ந்து வரும் அதிசய கிராமம் பற்றிய செய்திகள் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆணுக்கு பெண் துணை, பெண்ணுக்கு ஆண் துணை என்ற கோட்பாட்டுடன் இயங்கி வரும் இந்த உலகில், பெண்கள் மட்டுமே தனித்து வாழும் கிராமம் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அமைந்துள்ளது. ஆனால் ஆண்கள் இல்லாமல் இங்கு பெண்கள் சந்ததி மட்டும் எப்படி தழைக்க முடியும்? 

கென்யாவின் சம்பூர் என்ற மாகாணத்தில் உமோஜா என்ற கிராமம் ஒன்று உள்ளது. தலைநகர் நைரோபியிலிருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. முந்தைய காலங்களில் ஆண்களின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் முழுவதும் மாட்டு சாணம் மற்றும் மண் கலந்து கட்டப்பட்ட மானியட்டா என்ற ஒரு வகை குடிசைகளால் நிறைந்துள்ளது. இங்குள்ள மக்கள் பாதுகாப்பு கருதி இந்த குடிசைகளை சுற்றி முள்வேலிகளை போட்டுள்ளனர். இங்குள்ள மக்கள் வன்முறைக்கு எதிரானவர்கள். அவர்கள் பெண்களை ஆண்களைப் போல அடிபணிய வைப்பதில்லை. அங்கு அவர்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள். 

2005 ஆம் ஆண்டில் இந்த கிராமத்தில் 30 பெண்கள் மற்றும் 50 குழந்தைகள் இருந்த நிலையில், தற்போது 47 பெண்களும் 200 குழந்தைகளும் அங்கு வசித்து வருகின்றனர். இந்த கிராமம் 1990 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவத்தினரின் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் வீட்டு வன்முறை, குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களும் இங்கே வாழத் தொடங்கினர். இங்கே வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக ஆரம்பப் பள்ளி மற்றும் கலாச்சார மையத்தையும் இவர்கள் நடத்தி வருகின்றனர். 

கிராமத்தின் நலனுக்காக பாசிமணி, அணிகலன்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். உமோஜா கிராமத்திற்கு சென்று பார்வையிட மட்டுமே ஆண்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் அங்கே வசிக்க ஆண்களுக்கு அனுமதியில்லை. குழந்தை பருவத்திலிருந்தே அந்த கிராமத்திலேயே வளர்க்கப்படும் ஆண்கள் வேண்டுமானால் அங்கே தங்கலாம். இன்று வரை இங்கு வாழும் பெண்களின் வாழ்க்கை கடினமாகவே இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்கின்றனர். 

ஆண்களின் கொடுமைகளை அனுபவிப்பதை விட வேறு எதுவும் அவர்களுக்கு கடினமாகத் தெரியவில்லையாம். உலகின் மூளை முடுக்கெல்லாம் சிறு குழந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறையாகியுள்ள இந்த சூழலில், இந்த கிராமம் பெண்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com